தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து நாடு, தழுவிய போராட்டங்களை நடத்துவதற்கு தொழிலாளர் அமைப்புகளும் விவசாயிகள் அமைப்புகளும் அறிவிப்புச் செய்துள்ளன. எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் இந்தியாவெங்கும் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு.. திருமாவளவன் உறுதி.
தொழிலாளர்களின் நீண்டகால போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட 29-தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு 4-தொகுப்புகளாக பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட 8 மணி நேர வேலை என்பதை ஒழித்துக்கட்டிவிட்டு 12 மணி நேர வேலை என ஒரு கொடுங்கோல் நிலையை இந்தியாவில் அறிமுகப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.
அதுபோலவே மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள வேளாண் துறையில் தலையிட்டு விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சட்டங்களை எதிர்த்தும், கொரோனா பெருந்தொற்றால் பரிதவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500/- நிவாரணம், மாதம் 10 கிலோ அரிசி வழங்குவதோடு, 100 நாள் வேலைத் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவேண்டுமென்றும் கோரி எதிர்வரும் நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதுபோலவே 27ஆம் தேதி டெல்லியில் முற்றுகைப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர.
இந்த இரண்டு அறப் போராட்டங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.