டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14 இல் அதானி அம்பானி நிறுவனங்களையும் பொருட்களையும் புறக்கணிக்கும் பிரச்சார இயக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதானி - அம்பானி நிறுவனங்களுக்குப் புறக்கணிப்பு… துள்ளியெழுந்த திருமாவளவன்.

வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். டிசம்பர் 14ஆம் தேதி டெல்லியைச் சுற்றிலும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரை நோக்கித் திரளுமாறும் இதர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஆதரவு இயக்கங்களை மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதானி, அம்பானி ஆகிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த வேளாண் விரோத சட்டங்கள் மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே,அதானி அம்பானி ஆகியோரின் நிறுவனங்களையும், பொருட்களையும் புறக்கணிப்பது என்ற அறைகூவலை விவசாய இயக்கங்கள் விடுத்துள்ளன.
அதை ஆதரித்து எதிர்வரும் 14ஆம் தேதி தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்குகள், ஜியோ விற்பனை கடைகள் ஆகியவற்றின் முன்பாக அதானி- அம்பானி பொருட்களைப் புறக்கணியுங்கள் என்ற பிரச்சார இயக்கத்தை விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.