பெண்களை இழிவாக பேசிய திருமாவும் அதற்கு ஆதரவாக பேசிய ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்! பா.ஜ.க. ஆவேசம்!

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் ஆவேசமாக கூறியிருக்கிறார்.


மேலும் அவர், ‘’ மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல அம்மன் கடவுள்களை நாம் தினமும் வழிபட்டு வருகிறோம். கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து இந்து கடவுளை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்திற்கும், திமுகவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது, தாய்மையை கேவலப்படுத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் ஸ்டாலின். இதுபோன்று தவறு செய்பவர்களை காப்பாற்றுவதையே வேலையாக வைத்துள்ளார்.

ஆனால், பாஜக பெண்களை போற்றுகிறது. தெய்வமாக வழிபடும் பெண்களை இழிவாக பேசியோருக்கு பாடம் புகட்ட பெண்கள் காத்திருக்கின்றனர். இது நீண்டு கொண்டே போனால் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் வெளியே செல்ல முடியாது. நடமாட முடியாது. ஸ்டாலின் தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட ஆக வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை தாய்மார்கள் ஸ்டாலினை சும்மா விட மாட்டார்கள். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.