திருமாவளவனும் காஷ்மீர் விவகாரத்தில் மெகா பல்டி..! இம்புட்டுத்தான் உங்க வீரமா சிறுத்தைகளே..?

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகப் படுகொலை என்று வீராவேசம் காட்டிய மு.க.ஸ்டாலின், திடீரென அந்தர்பல்டி அடித்து, காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியது பற்றி எந்த விமர்சனமும் வைக்கவில்லை, நீக்கப்பட்ட முறைதான் தவறு என்று சொன்னார்.


சீமான் பாணியில் சொல்வது என்றால், கொலை செய்தது தப்பு இல்லை, கொலை செய்த விதம்தான் தவறு என்பதாகிப் போனது. புரட்சிப்புயல் என்று வர்ணிக்கப்படும் வைகோ திடீரென மருத்துவமனையில் ஆஜராகிவிட்டார்.

சிகிச்சை முடிந்து வந்தபிறகும் 15 நாட்கள் ஓய்வில் இருக்கப்போகிறாராம். சரி, அவர்தான் பேசவில்லை என்றால், அவரது கட்சிக்காரர்களும், இப்படியொரு விஷயம் இருக்கிறதா என்றே தெரியாமல் ஒளிந்துவிட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து வீரமாகப் பேசிவந்த ஒரே ஒருவர் திருமாவளவன். இதற்காக தமிழகமெங்கும் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து இருந்தார். ஆனால், திடீரென போராட்டத்தைத் தள்ளிவைத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது காஷ்மீர் போராட்டத்தை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்களாம். ஏனென்றால், 25.8.2019 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச்சிலையை தகர்த்து அவமதித்த சாதிவெறி மதவெறி கும்பலின் சமூகவிரோத நடவடிக்கைகளை கண்டித்தும்

அவர்களை அப்புறப்படுத்தாமல் மூன்று மணிநேரத்திற்கு மேலாக வன்முறை வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்த காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து முதலில் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்.

இதனை நிச்சயம் பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலும் கேலியும் செய்வார்கள் என்பதை உணர்ந்து, முன்கூட்டியே அறிக்கையில் சில விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்.

அதாவது, ‘சமூகவலைத் தளங்களில் எதிர்வினை என்கிற பெயரில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும் எழுதவோ பேசவோ கூடாதென்றும் கேட்டுக்கொள்கிறேன். நம்மை ஆத்திரப்படுத்துவதற்காக பிற்போக்கு சக்திகள் வேண்டுமென்றே நம்மை சீண்டி வம்பிழுக்க முனைகிறார்கள் அதற்கு ஒரு போதும் விடுதலைச்சிறுத்தைகள் இரையாகிவிடக்கூடாது’ என்று கூறியிருக்கிறார்.

எப்படியோ, நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வீரத்தையும் பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்த மோடிக்கு பாராட்டைத்தான் தெரிவிக்க வேண்டும்.