வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்! போராட்டத்தில் குதிக்கும் விடுதலை சிறுத்தைகள்.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைக் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு. வங்கித்துறையில் நடந்திருக்கும் இந்த மோசடியை விசிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, எதிர்வரும் அக்டோபர் 16ம் தேதி காலை11.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகளுக்கான அதிகாரிகள் தேர்வில் ஓ.பி.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 6 சதவீதத்தையும்; எஸ்.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 2 சதவீதத்தையும்; எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 1.5 சதவீதத்தையும் பறித்து அதனை EWS என்னும் FC பிரிவினருக்கு வழங்குவதா அறிவித்துள்ளனர். 

பொதுவில் 50 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டு, நலிவடைந்தோரின் இட ஒதுக்கீட்டில் கை வைத்திருப்பது திட்டமிட்ட சதியே ஆகும். இது மோடிஅரசின் சமூகநீதிக்கு எதிரான செயல்திட்டங்களுள் ஒன்றாகும். இவ்வாறு படிப்படியாக இடஒதுக்கீட்டு முறையையே இல்லாமலாக்குவதே அவர்களின் நோக்கமாகும். 

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி இன்னும் எந்தெந்த துறைகளில் இப்படி இட ஒதுக்கீடு அரவமில்லாமல் பறிக்கப்பட்டதோ தெரியவில்லை. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை வெளிப்படையாக அறிவித்துப் பறிக்கத் துணிந்திருக்கும் மோடிஅரசைக் கண்டித்துப் போராட வேண்டியது சமூகநீதிக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவருக்குமான கடமையாகும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்நேரத்தில் ஒருங்கிணைந்து இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்கத் தவறினால், இத்தனைக் காலமாகப் போராடிப் பெற்ற சமூகநீதியை முற்றாகப் பறிக்க சனாதன சக்திகள் தயங்கமாட்டார்கள் . எனவே, கொஞ்சமும் தாமதிக்காமல் இந்த அநீதியை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டுமென்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.