கடன் தவணையை 6 மாதங்களுக்கு நீட்டிக்கச் சொல்கிறார் திருமா!

வங்கிக்கடன் தவணைகள் செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளதை, ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் இவை மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானவை அல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “ வங்கிகள், கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தாலும், மார்ச் மாதத்துக்கான தவணை காலம் முடிந்துள்ள நிலையிலும் ஏப்ரல் மாதத்துக்கான தவணை மார்ச் 31 ஆம் தேதி எடுக்கப்பட்டுவிடும் என்ற சூழலிலும் மக்களுக்கு மே மாத தவணை மட்டுமே தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது.

அதாவது ரிசர்வங்கியின் அறிவிப்பில் ஒரு மாதம் மட்டுமே பயனுள்ளதாக அமையும் நிலையுள்ளது. எனவே இது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு நிவாரணமாக அமையாது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சிக்கல் தொடரும் என்பதை ஊகிக்க முடிகிறது. எனவே குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும்.

அதுபோலவே ஏழை எளிய மக்கள் உடனடியாக கடன் பெறுவதற்கு நகைக்கடன் திட்டத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, வட்டியில்லாமல் மூன்று லட்ச ரூபாய் வரை நகை கடன் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சர் உத்தரவிடவேண்டும். 

கிராமப்புற நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் விதமாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை உடனடியாக முன்பணமாக வழங்கவேண்டும். அதுபோலவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இலட்ச ரூபாய் சுழல் நிதியை வழங்க வேண்டும். 

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றுவதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வசூலையும், வருமான வரி செலுத்துவதற்கான காலத்தையும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை ஆறு மாதங்களுக்கான பொருட்களை முன்கூட்டியே கொடுக்க முடியும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு கையிருப்பு இருக்கும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தலா 30 கிலோ அரிசி அல்லது கோதுமை ஐந்து கிலோ பருப்பு, ஐந்து கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கவேண்டும். கொரோனா தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்கவேண்டுமென்றால் குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

வெளியூர்/ வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் கட்டாயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டவரோடு தான் தொடர்பில் இருந்ததாகத் தெரிந்தாலோ அப்படியானவர்கள் தாமே முன்வந்து தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கு எந்தவகையிலும் எதிர்ப்புத் தெரிவிப்பதோ அல்லது இதனை அலட்சியப்படுத்துவதோ கூடாது. அரசு எடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நம்முடைய நலனுக்கானவைதான் என்பதை உணர்ந்து பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்கவேண்டும். அப்போதுதான், இந்த பேராபத்தில் இருந்து நாம் அனைவரும் தப்பிக்க முடியும்.” என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.