பெற்ற வெற்றியை அடைய போராடிய திருமா! இதிலுமா ஜாதி துவேஷம்?

யார் ஜெயிச்சாலும் பரவாயில்லை, அந்த திருமாவளவன் மட்டும் ஜெயிக்கக்கூடாது என்பதுதான் கொங்கு அ.தி.மு.க.வின் முக்கிய அஜென்டாவாக இருந்தது. திருமா ஜெயித்துவிட்டால், தங்கள் ஜாதிக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய்விடும் என்று நினைத்துத்தான் சிதம்பரம் தொகுதியில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டதாகச் சொல்கிறார் திருமாவளவன்.


திருமாவளவன் தோற்றுவிட்டால், ஜாதி வெறியை மக்கள் தோற்கடித்துவிட்டார்கள் என்று பாப்ரப்பைக் கிளப்ப எதிர்க் கட்சிகள் தயாராக இருந்தார்கள். இதைத் தொடர்ந்து ஜாதிக் கலவரம் தூண்டவும், மக்களிடையே வெறுப்பு அரசியலை உருவாக்கவும் இருந்தார்கள். அந்த நிலவரத்துக்கு தமிழர்கள் அடிமையாகவில்லை என்பதுதான் திருமாவளவன் வெற்றி காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திருமாவளவனிடம் அறிவார்ந்த சிந்தனை, நிதானமான அரசியல், பக்குவமான வழி நடத்தல் என ஒரு முதிர்ச்சியான தலைமை இருக்கிறது. ஆனால், இந்த அத்தனை தகுதிகளையும் வெறும் சாதி என்ற ஒரு மாய ஆயுதத்தால் வீழ்த்திவிட நினைக்கிறார்கள். 

இந்தியா முழுவதிலும் கடந்த சில பத்தாண்டுகளில் பல தலித் தலைவர்கள் மோடியிடம் சரணாகதி அடைந்துவிட்டனர். பஸ்வான் தொடங்கி நம்ம ஊர் கிருஷ்ணசாமி வரை மோடியின் ஊதுகுழலாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க.வை சமரசமில்லாமல் இன்றுவரை திருமாவளவன் எதிர்க்கிறார். அதிகார மிரட்டல்கள், அரசியல் லாப-நட்டங்கள், ஆளும் தரப்பு முன் வைத்த பொருளாதார பேரங்கள், தேர்தல் கணக்கீடுகள் என அனைத்தையும் ஒதுக்கிக் தள்ளிவிட்டு, சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

திருமாவின் வெற்றியை, சாதிய வெறிக்கு எதிரான வெற்றி, சனாதனக் கோட்பாட்டுக்கு எதிரான வெற்றி, ஆதிக்க மனநிலைக்கு எதிரான வெற்றி, நாகரிக அரசியலுக்கு ஆதரவான வெற்றி,  எளியவர்களின் வெற்றி என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

எதிர்கட்சியாக இருக்கும் நிலையில், அவரால் சிதம்பரம் தொகுதியை பொன்னாக மாற்றிவிட முடியாது என்றாலும், உரக்க குரல் எழுப்புவார். அதுதான் அவரது அடையாளம் என்கிறார்கள். ஜாதியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு முன்னிலையில் எழுந்து காட்டியிருக்கும் திருமாவளவனின் முதல் வேலை, ஜாதி துவேசங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதுதான். அதை செய்வார் என்றே நம்புவோம்.