அத்திவரதர் வெளியே வந்தா தண்ணீர் பஞ்சம் தீர்ந்துடுமா? சரித்திரமே இல்லை! சீண்டும் கி.வீரமணி!

அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே பிரசன்னமாகும்போது, தமிழ்நாட்டில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.


அப்படி சொல்வது உண்மையில்லை, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறார் கி.வீரமணி. இதுதான் அந்த அறிக்கை. அத்திவரதன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் காலத்தில் எல்லாம் தமிழகத்தில் மழை பெய்து பஞ்சம் நீங்கும் என்று கதை விடப்பட்டுள்ளது. இவ்வாறு பரப்பப்பட்டு வரும் போலியான தகவலை தகுந்த சான்றுகளோடு தமிழ்நாடு வெதர்மேன் என்ற காலநிலையை அறிவியல் பூர்வமாக துல்லியமாக கணித்துக் கூறும் தமிழ்நாடு  சூழியல் ஆர்வலர் கூறியுள்ளார்.

1854 ஆம் ஆண்டு முதல் உண்மை நிலை என்ன? இது குறித்து அவரது முகநூல் பதிவில் ஊடகம் மற்றும் பழைய ஆவணங்களில் இருந்து 18.8.1854, 13.6.1892, 12.7.1937 மற்றும் 02.07.1979 ஆகிய ஆண்டுகளில் அத்திவரதன் சிலையை வெளிக்கொண்டுவந்த காலகட்டம் மற்றும் தற்போது 01.07.2019 காலத்தில் மழை பதிவுகள் குறித்து பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கையை ஏற்றும் சான்றுகளோடு பதிவு செய்துள்ளார்.

‘‘மேற்கண்ட ஆண்டுகளில் பெய்த மழையை ஆய்வு செய்த. நான்  அக்கால்கட்டத்தில் மழைப்பொழிவுகள் குறித்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன், சென்னையைப் பொறுத்தவரை தென்கிழக்கு பருவமழையின் காரணமாக நல்ல மழைபெற்றுக் கொண்டே இருந்துவந்துள்ளது, இருப்பினும் இடை இடையே மழையின்மையை சந்தித்துள்ளது. 

மழைப்பொழிவு குறித்த என்னுடைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளது,  அத்திவரதன் குறித்தும் அதுதொடர்பான மழைப்பொழிவு குறித்தும் நான் சான்றுகளோடு எழுதிய போது என்னுடைய பதிவுகள் தடைசெய்யப்பட்டன, மோசமானது என்று புகார் அளிக்கப்பட்டது. அது குறித்து நான் கவலைப்படவில்லை. நான் அறிவியல் ஆய்வுகளோடு பல்வேறு சான்றுகளை வைத்து என்னுடைய முடிவுகளைத் தெரிவிக்கிறேன். என்னை மதித்தால் நான்  மதிப்பேன்.

ஆனால் என்னுடைய  ஆய்வின் முடிவுகளை மாற்றிக்கூறச்சொல்ல யாருக்கும் அருகதை இல்லை. சான்றுகளின் முடிவின் படி அத்திவரதனை தண்ணீரிலிருந்து தூக்கி வெளியே வைத்த 1854 மற்றும் 1892 இரண்டு ஆண்டுகளும் கடுமையான தண்ணீர்பற்றாக்குறையை தமிழகம் சந்தித்துள்ளது, அதே போல் கடைசி 1979-ஆம் ஆண்டிலும் தமிழகத்தில்  மழை குறைவாகவே இருந்தது. ஒரே ஒரு ஆண்டு அதாவது 1937-ஆம் ஆண்டு மட்டும் நல்ல மழை இருந்தது,

1933 ஆம் ஆண்டிலிருந்து அதாவது 7 ஆண்டுகள் தொடர்ந்து நல்லமழையைத் தமிழகம் பெற்றுள்ளது, ஆகவே மழைக்கும் அத்திவரதனை குளத்தில் இருந்து தூக்கி வெளியே வைப்பதற்கும் தொடர்பில்லை. மேலும் இவர்கள் கூறும் அத்திவரதன் வெளியே வரும் ஆண்டுகள் எல்லாம் தண்ணீர்பஞ்சம் தீரும் நல்ல மழை வரும் என்பதும் பொய்யாகிப்போனது.’’

ஆய்வின் அடிப்படையில் விஞ்ஞானப் பார்வையில் சூழியலில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சமுகவலை தளத்தில் இதனைப் பதிவிட்ட நிலையில், அவரை பிற்போக்குவாதிகளும், சங் பரிவார்களும், காவிகளும், கடவுளையும், மூடநம்பிக்கைகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும்,

பக்தியின்மூலம் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சூழ்ச்சிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து சமுக வலைதளங்களில் தாக்குவதும், அச்சுறுத்துவதும் விஞ்ஞானத்தின்முன் அவர்கள் மண்டியிட்ட உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக அவர் பதிலை நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அச்சமின்றி ஆய்வின் அடிப்படையில் துல்லியமாக உண்மையைப் போட்டுடைத்த ஆய்வாளருக்கு நமது வாழ்த்துகள், பாராட்டுகள் தெரிவித்திருக்கிறார் வீரமணி.