மின்சாரக் கட்டணக் கொள்ளையில் இருந்து விடுதலையே இல்லையா..? நாகல்சாமி சொல்வதைக் கேட்டால் கட்டணம் குறையும்… செய்யுமா அரசு?

ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.


அனைவரும் வீட்டில் இருப்பதால் மின்சார கட்டணம் உயரத்தான் செய்யும் என்று நீதிமன்றமும் வக்காலத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில், ஏன் இப்படி உயர்கிறது என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செ.நாகல்சாமி (ஐஏஎஸ் ஓய்வு) சொல்வதைக் கேட்கலாம். 

தமிழகத்தில் இன்று கரோனாவை விட மக்களை அதிகம் அச்சுறுத்துவது மின் கட்டணம்தான். இதற்குமுக்கிய காரணம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-ல் வெளியிட்டு இன்றுவரை தொடரும் கட்டண விகித அமைப்பு முறைதான்.

ஊரடங்கால் மார்ச் 20 முதல் மே 20 வரை மின்ஊழியர்கள், மின் கணக்கீடு செய்யாத நிலையில், மே-ஜூன் மாதங்களில் எடுத்த அளவைமின்சார வாரியம் கணக்கிட்ட முறை, மின்மீட்டர் அளவெடுத்த ஊழியர்களின் கணக்கீட்டுத் தவறுகள் மற்றும் ஊரடங்கால் அனைவரும் வீடுகளிலேயே இருந்ததால் ஏற்பட்ட கூடுதல் மின்பயன்பாடு இவற்றால் கட்டணமும் கூடியுள்ளது.

இதில், 2 மாதங்களுக்கு 200யூனிட்களுக்குள், 500 யூனிட்களுக்குள் இருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 200 யூனிட்களை தாண்டினால் ஓரளவுக்கும், 500யூனிட்களை தாண்டினால் பெரிய அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டு கட்டண விதிப்பு (Tariff Order) உத்தரவு வரும்வரை மின்கட்டணம் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அரசுமானியம் அனைவருக்கும் கிடைத்தது. டிசம்பர் 2014-ல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்புதிய கட்டண விகித உத்தரவை வெளியிட்டதில்தான் இந்த 500யூனிட்களுக்கு கீழ், 500 யூனிட்களுக்கு மேல் என்ற பாகுபாடு நிறுவப்பட்டது. அப்போது ஆணையத்தில் நான் உறுப்பினராக இருந்தேன். ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களின் கட்டண உயர்வு உத்தரவுக்கு எதிராக, கட்டண உயர்வு கூடாது என நான் எதிர் உத்தரவு இட்டேன். பெரும்பான்மை உத்தரவுஎன்ற அடிப்படையில், அந்தக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.

500 யூனிட்களுக்கு மேல் நுகர்வோருக்கு அரசு மானியம் இல்லை என்ற ஒரு புதிய விதிமுறையை அரசாங்கமே தொடங்கியது. அதைத்தான் இன்று நுகர்வோர் எதிர்கொள்கிறார்கள். இதனால், இன்று 100, 200, 500யூனிட்டுகள் என 3 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மாதத்துக்கு100 யூனிட் மட்டும் பயன்படுத்துபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் ரூ.170 கட்டினால் போதும். 500 யூனிட்கள் பயன்படுத்தினால் ரூ.1,130 செலுத்த வேண்டும். இதுவே, 501 என ஒரு யூனிட் கூடினால் ரூ.1,736.60 கட்ட வேண்டும். ஒரு யூனிட்டின் விலை ரூ.606.60 வருமா என்ற கேள்வி எழுகிறது. 500 யூனிட்களுக்கு அரசு மானியம் இல்லை என்பதால் வரும் விளைவுதான் இது.

ஊரடங்கால் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மின்நுகர்வு அளவை கணக்கிட முடியாததால், ஜனவரி-பிப்ரவரி மாதக் கட்டணத்தையே கட்ட சொல்லியதால், நுகர்வோரும் கட்டினர். அடுத்து, மே-ஜூன் மாதங்களில் எடுக்கப்பட்ட மின்அளவீடு மார்ச்-ஏப்ரல், மே-ஜூன் என்ற இருகட்டண காலத்துக்கு உரியதாகும். எனவே, இதை இரண்டாகப் பிரித்து இரு கட்டண காலங்களுக்குமான மொத்த தொகையைக் கணக்கிட்டு, அதில் இருந்து முன்பு கட்டிய தொகையைக் கழித்து விட்டு மீதியைக் கட்டச் சொல்கிறார்கள்.

இதற்கு பதில் பழைய பில் படி எவ்வளவு யூனிட்களுக்கு முன்பு கட்டணம் கட்டி இருக்கிறார்களோ அந்த யூனிட்களை (பணத்தை அல்ல) மொத்த 4 மாத யூனிட்களில்இருந்து கழித்து விடுவதுதான் சரியான கணக்காக இருக்கும். அப்படிகணக்கிடும்போது ஒரு கட்டணகாலத்தின் பில் தான் அதிகமாக இருக்கும். ஓரளவுக்கு நுகர்வோருக்கு கட்டணம் குறையும்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மின்கணக்கீடு எடுக்காததால் சரியாகஎவ்வளவு யூனிட் உபயோகப்படுத்தப்பட்டது என்று தெரியாத நிலையில் இதுதான் சரியான அணுகுமுறையாகும். 1990 வரை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக் குறைவு. அரசுகளின் ஊழலால் 1991-ம் ஆண்டு முதல் மற்றமாநிலங்களைவிட உயர்ந்துவிட்டது. 2003-ல் தமிழ்நாடு மின்வாரியம்நடத்திய ஆய்வில் 50% வீட்டு மின்நுகர்வோர் 2 மாதத்துக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 செலுத்தினர். 2010-ம் ஆண்டில் இருந்து மின்சார கொள்முதலில் கொள்ளையடிக்க ஆரம்பித்த மின்வாரியத்துக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தப் பட்டது.

குறைந்த விலையில் கிடைத்தபோதும், விதிகளுக்கு மாறாக அதிகவிலையில் மின்சாரம் இன்னும் வாங்கப்படுகிறது. ரூ.45 ஆயிரம் கோடி இழப்பீட்டை விளைவிக்கும் மின்சாரக் கொள்முதலை எதிர்த்து 2015-ல் நான் ஓர் உத்தரவை பிறப்பித்தேன். ஆனால், அந்தக் கொள்முதல் இன்னும் தொடர்கிறது. இந்த ஊழல்கள் மின்வாரியத்தில் தொடரும் வரை கட்டண உயர்வில் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.