ஐயப்பனுக்கு மட்டும் ஏன் அரவணை பிரசாதம்? காரணம் இதுதான்!

சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக ‎வழங்கப்படுகின்றன.


இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற ‎பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் ‎பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி ‎கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது ‎மிகப்பெரிய கோவிலாகும்.

இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற ‎இடத்தில் உள்ளது.‎ இந்த அரவணை பிரசாதம் எப்படி சாஸ்தாவுக்கு பிரசாதமாயிற்று என்பதற்கு ஒரு சுவாரசியாமான கதை இருக்கிறது. ஒரு சமயம் ஆனைமுகப் பெருமான் தன் இளைய சகோதரரான பாலசாஸ்தாவை தன் மூக்ஷிக வாகனத்தில் அமர்த்திக் கொண்டு அகில உலகமெங்கும் வலம் வந்து கொண்டிருந்தார்.

அதனை அறிந்த சரஸ்வதிதேவி அவர்களை தங்கள் லோகமான சத்யலோகத்துக்கு அழைத்தாள். சிவ மைந்தர்களான சாஸ்தாவும் விநாயகரும் நமது லோகத்துக்கு வருகிறார்கள். அவர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் என்று கலைமகள் நாயகரை நோக்கி வேண்டிக்கொண்டாள்.

இதையடுத்து ரிஷிகளும் யோகிகளும் புடைசூழ விநாயகரையும் சாஸ்தாவையும் வரவேற்க பிரம்மதேவன் பூர்ண கும்பத்தோடு சென்றார். சத்திலோகத்துக்கு வந்த சகோதரர்களை வேத கோஷங்கள் முழங்க வரவேற்றனர். நான்முகனும் கலைவாணியும் 64 வகை உபசாரங்களையும் செய்து மகிழ்ந்தார்கள்.

முதலாவதாக நறுமணமிக்க நீரால் மங்கள நீராட்டினர். அதன்பின்னர் விநாயகருக்கு வெண்ணிற பட்டாடையும், மகாசாஸ்தாவுக்கு மஞ்சள் நிற பட்டாடையும் அளித்தனர். பின்னர் இருவரையும் ஆசனங்களில் அமர வைத்து அறுசுவையோடு உணவு அளித்து மகிழ்ந்தார்கள். ஏகதந்தனுக்கு மோதகத்தையும், மகாசாஸ்தாவுக்கு சர்க்கரை பொங்கலையும் வழங்கினாள் சரஸ்வதி.

விநாயகரும் மோதகத்தை விரும்பி உண்டார். பகவான் சாஸ்தா, ’கலைவாணியே என் மீது கொண்ட அன்பினால் நீங்கள் எனக்களித்த மஞ்சள் பட்டாடையும், சர்க்கரை பொங்கலும் எனக்கு மிகவும் மன நிறைவை அளிக்கிறது. உங்கள் அன்பின் வெளிப்பாடாக நீங்கள் அளித்த இந்த மஞ்சள் பட்டும் சர்க்கரை பொங்கலும் இனி எனக்கு என்றும் பிரியமானவயாக இருக்கும். இவற்றை எனக்கு அளிப்பவர் எனது அருளை எளிதில் பெறுவர் என்று வரமருளினார்.