சர்வதே போட்டிகள், ஐ.பி.எல் என எதிலும் விளையாடாத மும்பை வீரர் ஒருவரை பெங்களூர் அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
2 முறை ஒரே ஓவரில் 5 சிக்சர்! ரூ.5 கோடிக்கு ஏலம் போன மும்பை வீரர் யார் தெரியுமா?

மும்பை டி20 லீக்கின் மூலம் கிரிக்கெட் உலகில் அறியப்பட்டவர்
ஷிவம் துபே. இவரைத்தான் பெங்களூர் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
மீடியம் பேஸ் பவுலிங் போடுவதுடன் அதிரடியாகவும் ஆடக்கூடியவர் துபே. ஆல் ரவுண்டர்
என்பதால் தான் அறிமுகம் இல்லாத ஒரு வீரருக்கு விராட் கோலி தலைமையிலான பெங்களூர்
அணி 5 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது.
மும்பை டி20
லீக்கின் போது பிரவீன் தாம்பே ஓவரை துபே அடித்து நொறுக்கியது தான் அவர் வாழ்வில்
திருப்பு முனையை ஏற்படுத்தியது.தாம்பே வீசிய ஒரு ஓவரின் ஐந்து பந்துகளை
சிக்சருக்கு விரட்டி அசத்தினால் துபே. இது போதாது என்று நேற்று அதாவது ஐ.பி.எல்
ஏலத்திற்கு முதல் நாள் ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்களை
விளாசியுள்ளார் துபே.
பரோடா அணிக்கு
எதிரான போட்டியில் மும்பை சார்பில் களம் இறங்கிய துபே, ஸ்வப்னில் சிங் வீசிய ஒரு
ஓவரின் ஐந்து பந்துகளை சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஐந்து
சிக்சர்களை இரண்டு முறை தெறிக்கவிட்ட பெருமை துபேவுக்கு சாரும். இதன் காரணமாகவே
துபேவை வாங்க ஐ.பி.எல் ஏலத்தில் அனைத்து அணிகளும் போட்டியிட்டன.
இறுதியில் கோலியின்
பெங்களூர் அணி துபேவை 5 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்திவிட்டது. சிறப்பாக பேட்டிங்
செய்வதுடன், ஆஜானு பாகு தோற்றத்தில் இருக்கும் துபே பந்து வீசுவதும் அணிக்கு
கூடுதல் பலமாகும். ஆல் ரவுண்டர் என்பதால் தான் தயங்காமல் ஐந்து கோடி ரூபாயை
பெங்களூர் அணி அவிழ்த்துள்ளது.