விதைநெல்லை விற்றுத் தின்ன முயற்சி செய்யும் மோடி அரசு! ரிசர்வ் வங்கியுடனான மோதலின் பின்னணி!

நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை மோடி அரசு சீர்குலைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சிபிஐ அமைப்புக்குள் ஏற்பட்ட சண்டை சந்தி சிரித்ததற்கு மோடி அரசே காரணம் என்று கூட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன சிபிஐ வரிசையில் இப்போது ஆர்பிஐ.


கட்டுரை: தமிழ்செல்வன்

ரிசர்வ் வங்கி எதற்கு?

    உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மத்திய வங்கி உண்டு. இந்தியாவிலுள்ள மத்திய வங்கியை தான் நாம் ரிசர்வ் வங்கி என்று குறிப்பிடுகிறோம். சுதந்திரத்திற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி 80 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. ஆர்பிஐ என்று குறிப்பிடப்படும் ரிசர்வ் வங்கி, பொருளாதாரத் துறையில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.

    நாட்டின் பொருளாதாரத்தை கையாளக்கூடிய இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று நிதிக்கொள்கை. இது ஆங்கிலத்தில் fiscal policy என்று குறிப்பிடப்படுகிறது மற்றொன்று monetary policy. இது செலாவணி கொள்கை என்று குறிப்பிடப்படுகிறது. நிதிக்கொள்கைக்கு பொறுப்பு மத்திய அரசு என்றால், செலாவணி கொள்கைக்கு பொறுப்பு ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் பணிகள் என்ன?

    உருவாக்கப்பட்ட ஏப்ரல் 1, 1935 ஆம் ஆண்டு முதல், வங்கிகளை ஒழுங்குபடுத்துவது, அன்னியச் செலாவணி இருப்பு வைப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான நிதிச் சேவைகளை ரிசர்வ் வங்கி வழங்குகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிதித்துறையை கண்காணிப்பது தான் ரிசர்வ் வங்கியின் முதன்மையான நோக்கமாகும்.

    வங்கி முறையின் மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதும் ரிசர்வ் வங்கி தான்.  பண விநியோகத்தை, பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி தான் கட்டுப்படுத்துகிறது. ஜிடிபி (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி) போன்ற குறியீடுகளையும் ரிசர்வ் வங்கி தான் கண்காணிக்கிறது. ரூபாய் நோட்டுகளில் வடிவமைப்பு காசுகளின் வடிவமைப்பு போன்றவற்றையும் ரிசர்வ் வங்கி தான் தீர்மானிக்கிறது.

எப்படி ஒரு தனி நபருக்கு நிதி பரிவர்த்தனைகளை பயனுள்ள வகையில், திறனுள்ள முறையில் மேற்கொள்ள ஒரு வங்கி தேவையோ அதுபோல அரசுகளுக்கும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒரு வங்கி தேவை. ரிசர்வ் வங்கி இந்த தேவையையும் நிறைவு செய்கிறது. அரசினுடைய கணக்கு வழக்குகளையும், அந்தக் கணக்குக்கு வரவேண்டிய பணம் அதிலிருந்து செலுத்த வேண்டிய பணம் போன்றவற்றை பராமரிக்கிறது.

   இந்தியா வசமுள்ள சர்வதேச செலாவணி சேம இருப்புகளின் காப்பாளராகவும் உள்ளது. அன்னியச் செலாவணியை நிர்வகிப்பது ரிசர்வ் வங்கியின்  மிக முக்கியமான கடமையாகும். அதுமட்டுமின்றி இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு ரிசர்வ் வங்கி தான். இந்திய அரசுக்கான வங்கியாக மட்டுமல்லாமல் வங்கிகளுக்கான வங்கியாகவும் அது இருக்கிறது.

மோடி – ரிசர்வ் வங்கிமோதல் ஏன்?

   இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி மத்திய வங்கிகளுக்கும் அரசுகளுக்கு இடையேயான மோதல் என்பது புதிதல்ல. இந்தியாவில் இப்படிப்பட்ட பிணக்கு ஏற்பட்ட போதெல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் 83 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை மத்திய அரசு பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கட்டளைகளை பிறப்பித்துள்ளது. 

    மத்திய அரசுக்கு இணக்கமான ஒருவர்தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக வரமுடியும் எனும் வகையில் தேர்வு முறையை பா.ஜ.க அரசு மாற்றியமைத்தது. ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு உள்ளிட்டவற்றில் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசியல்வாதிகளை மோடி அரசு நியமித்தது. நிதி மசோதா 2016-ஐ நிறைவேற்றியதன் மூலம் ரிசர்வ் வங்கியை பணவீக்கத்தை மட்டும் பற்றிக் கவலைப்படும் அமைப்பாகவும் சுருக்கியது பா.ஜ.க அரசு. இப்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை ஒவ்வொன்றாக பிடுங்கிய மத்திய பாஜக அரசு, ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7ஆவது பிரிவை பயன்படுத்தியதன் மூலம், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் மற்றும் சுதந்திரத்தையும் அப்பட்டமாக பறித்துள்ளது.

7வது பிரிவு என்றால் என்ன?

"பொது நலன்" என்கிற அடிப்படையில், ஆலோசனைக்கு பிறகு அரசானது ரிசர்வ் வங்கிக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பதுதான் இந்த ஏழாவது பிரிவின் அடிப்படையாகும்.ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு அப்பட்டமாக தலையிடுகிறது என அதன் துணை ஆளுநர்கள்  விரால் ஆச்சார்யாவும்,  விஸ்வநாதனும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொள்ளும் மத்திய அரசு, அதை மனதில் கொண்டு குறுகிய கால நலன்களுக்கு முடிவெடுக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கி தொலைநோக்காக சிந்தித்து முடிவெடுக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவது மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என விரால் ஆச்சார்யா பேசியிருந்தார். இதேபோல, பணம் போட்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வங்கிகள் முதன்மையாக கடமைப்பட்டிருக்கின்றனவே ஒழிய, கடன் வாங்கியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டது பற்றி கவலைப்படுவது அவற்றின் வேலை அல்ல என விஸ்வநாதன் பேசியிருந்தார்.

ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு என்ன கேட்கிறது?

    இந்த இரு பேச்சுகளையும் ரிசர்வ் வங்கி தனது இணைய தளத்திலும் ஏற்றியுள்ளது. மறைமுகமாக இந்த பேச்சில் வெளிப்படுவதை, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என நேரடியாகக் கூறினால், பின்வரும் விடை கிடைக்கிறது.

   அரசுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு மிக அதிகமாக உயர்ந்து இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி கடனை வாரி வழங்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதேபோல எரிசக்தி (மின்னுற்பத்தி) சார்ந்த நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் நேரிடும்போது மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

மிக முக்கிய பிரச்சனை என்ன?

   இதை விட, ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே 2 மிக முக்கியமான பிணக்குகள் உள்ளன: அது ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் தொகையை ரிசர்வ் வங்கி எப்படி கையாள்வது என்பது தொடர்பானது முதல் பிணக்கு.

    உபரியில் அரசுக்கு வழங்கியதுபோக மற்றொரு பகுதியை ரிசர்வ் வங்கி சேமிப்பாக வைத்துக் கொள்கிறது. இப்படி சேமித்து வைக்கும் இருப்புக்கு வரம்பு நிர்ணயிப்பது, அதாவது எவ்வளவு சேம இருப்பு வைத்துக் கொள்ளலாம், அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது இரண்டாவது பிணக்கு.

புதிய தேர்வு முறை மூலம், முதன் முதலாக ரிசர்வ் வங்கி ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட உர்ஜித் பட்டேல் பொறுப்புக்கு வந்த பிறகு, ரிசர்வ் வங்கி உபரித் தொகை முழுவதையுமே அரசுக்கே கை மாற்றிவிடுகிறது. இதுவும் போதாது என்று விதை நெல் போல இருக்கும் சேம இருப்பிலும் கைவைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்பதுதான் அபாயச் சங்கு.

ரிசர்வ் வங்கியிடம் திடமாக உள்ள சேம இருப்பில் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாயை உருக்கி, பணப்புழக்கமாக வங்கிகள் மூலம் பெரு நிறுவனங்களுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்-பாஜக பின்புலம் கொண்டவர்களுக்கும் மடைமாற்றி விடுதல் என்பதே மத்திய அரசின் உள்நோக்கம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.

   அரசின் திட்டச் செலவுகளை அதிகரிப்பதன் மூலமும் தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டில் சுபிட்சம் நிலவுவது போலவும், பணம் தாராளமாக புழங்குவது போலவும் காட்டுவதற்கும் மத்திய அரசு முயற்சிக்கிறது. அதாவது எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அரசு திவாலாகி விடாமல் காப்பதற்காக வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் சேம இருப்பை குறுகிய கால அரசியல் நலன்களுக்கும், கார்ப்பரேட் நலன்களுக்காகவும் காவு கொடுக்க முயற்சி செய்கிறது மத்திய அரசு. அதாவது விதை நெல்லை விற்றுத் தின்ன முயற்சி செய்கிறது, மோடி அரசு என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக கூறிவிடலாம்.

விதை நெல்லை விற்று தின்னலாமா?

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தபோது, ரிசர்வ் வங்கியின் சேம இருப்பில் உள்ள டாலரை தாராளமாக அன்னியச் செலாவணி சந்தையில் வாரியிறைத்து அந்த சரிவை செயற்கை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. அதுவும் விதை நெல்லை விற்றுத் தின்னும் முயற்சிதான். அப்படிப்பட்ட நிலையை முன்னர் ஒருமுறை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஏற்றுமதி-இறக்குமதி வேறுபாடு காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை கடுமையாக உயர்ந்தது, அந்நிய செலாவணி கையிருப்பு முற்றாக தீர்ந்தது, நிதிப்பற்றாக்குறை அதிகரித்தது என இந்தியாவின் நிதி நிலைமை 1990 காலகட்டத்தில் சீரழிந்தது. சர்வதேச செலாவணி நிதியத்தில் 2.2 பில்லியன் டாலர் தொகை கடனாகப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி  67 டன் தங்கத்தை அடமானம் வைத்தது. அதாவது மத்திய வங்கியின் ஒட்டுமொத்த தங்க இருப்பும் அடமானம் வைக்கப்பட்டது. 47 டன் பாங்க் ஆஃப் இங்கிலாந்துக்கும், 20 டன் யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்துக்கும் விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டது.

   அதாவது இந்தியாவின் மானம், விமானம் ஏறியது. விதை நெல்லை விற்றுத்தின்பவர்கள் கதை இறுதியில் இப்படித்தான் முடியும். ஆம் விதை நெல்லை விற்றுவிட்டால் அடுத்த விதைப்பிற்கு நாம் எங்கு செல்ல முடியும்? வேறு நாடுகளிடம் கையேந்துவதை தவிர வேறு வழி இருக்காது.