மக்களுடன் குற்றாலத்தில் குளித்த பெருந்தலைவர் இப்படியொரு தலைவன் இனி வருவாரா?

காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது ,இதுபோன்ற குற்றால சீசனில் இங்கே வருகை தந்திருக்கிறார்.


குற்றாலம் அமைந்திருக்கும் அதே நெல்லை மாவட்டத்துக்காரரான காமராஜருக்கு அந்த அருவியும் அது தரும் குளுமையும் நெஞ்சுக்கு நெருக்கமானவையாக இருந்திருக்கின்றன.அதனால் அந்த பகுதிக்கு வந்த போது ஒரு குளியல் போடலாமே என்று தோன்ற,குற்றாலம் வந்திருக்கிறார்.கார் நிற்கிறது,காமராஜர் இறங்கிப் பார்க்கிறார், அருவி கொட்டிக்கொண்டு இருக்கிறது.

ஆனால்,போலீசார் உட்பட ஏழெட்டு அதிகாரிகளையும்,சில குரங்குகளையும் தவிர அருவி பக்கம் யாரையும் காணோம்.அவருக்கு ஒரே ஆச்சரியம்,என்னய்யா யாரையுமே காணல என்று விசாரித்த போதுதான் அதிகாரிகள் அவருக்கு அந்த அதிர்ச்சி தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.'ஐயா,வெள்ளைக் காரங்க காலத்துல இருந்தே , வி.ஐ.பிங்க வரும்போது யாரையும் குளிக்க அனுமதிக்கறதில்லைங்க' என்று!

அவருக்கு கெட்ட கோபம்.வந்திருக்கிறது.தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மக்களை உடனே அழைத்து வரும்படி அதிகாரிகளை விரட்டி இருக்கிறார்.மக்கள் வந்தவுடன் காமராஜரும் அவர்களுடன் சேர்ந்து கும்பலில் ஒருவராக குளித்துவிட்டு போயிருக்கிறார்.இது போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல, இன்றைய  இந்தியாவில் எங்காவது நடக்க வாய்ப்புண்டா?.