உலகிலேயே அதிகம் கடத்தப்படும் உயிரினம் இதுதான்! ஏன் தெரியுமா?

உலக அளவில் எறும்புத் தின்னியை பலரும் கடத்த தொடங்கியுள்ளதால், அது அருகி வரும் உயிரினமாக மாறியுள்ளது.


ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எறும்புத் தின்னி என்ற உயிரினம் அதிகளவில் உள்ளது. உடல் முழுக்க ஓடுபோல போர்த்தியிருக்கும். அந்த ஓட்டை உரித்துவிட்டால், உடல் முழுவதும் மென்மையான சதை மட்டுமே இருக்கும். இதனை வேட்டையாடுவது மிக எளிதான விசயமாகும். எனவே, இதனை மனிதர்கள் முழு வீச்சில் தற்போது வேட்டையாடி வருகின்றனர். 

இந்நிலையில், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியன் இதுதொடர்பாக, ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆம். எறும்புத் தின்னியை கணக்கு வழக்கின்றி ஆளாளுக்கு வேட்டையாடுவதால், அதன் எண்ணிக்கை உலக அளவில் பெருமளவில் குறைந்து, அது ஒரு அருகிவரும் உயிரினமாக மாறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக, 2014ம் ஆண்டில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான எறும்புத் தின்னிகள் வேட்டையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தோல் மற்றும் இறைச்சியை பயன்படுத்தி, பல்வேறு நாட்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதால், கள்ளச் சந்தையில் எறும்புத் தின்னிக்கு அதிக வரவேற்பு உள்ளதாம். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும், சிங்கப்பூர் போலீசார் 14 டன் மதிப்புள்ள எறும்புத்தின்னியின் முள் தோலை பறிமுதல் செய்துள்ளனர். இது நைஜீரியாவில் இருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்டபோது, சிங்கப்பூரில் சிக்கியதாக தெரியவந்துள்ளது.  இதன் மதிப்பு சுமார் 39 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 

சீன நாட்டு மருத்துவர்கள்தான், இப்படி வன உயிரினங்களின் உடல் உறுப்புகளை அதிக பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். அதனை பயன்படுத்தி பல்வேறு மருந்துகளை அவர்கள் தயாரித்து விற்று,நல்ல பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தியே, உலகில் நடைபெறும் பெரும்பாலான வன உயிரின வேட்டை இருப்பதாக, வன உயிரின பாதுகாவலர்கள் குறிப்பிடுகின்றனர்.