துரத்திய வறுமை..! விஷத்தை குடித்த இளைஞன்! நேரில் பார்த்த நண்பனும் தற்கொலை முயற்சி! தஞ்சை நெகிழ்ச்சி!

தஞ்சாவூர்: கல்லூரி நண்பர் விஷம் குடித்ததால் மனம் வருந்தி, மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன், தங்கராசு, லதா உயிரிழந்த நிலையில், அவரது மகன்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், தங்கராசுவின் மூத்த மகன் கூலி வேலை செய்து, தனது தம்பி குருநாத்தை (வயது 18) படிக்க வைத்தார்.

இதன்படி, ஒரத்தநாடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஏ படித்து வந்த குருநாத், கீழையூரை சேர்ந்த சாமுவேல் (18 வயது) என்பவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்துள்ளார். இருவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்த நிலையில், வறுமை காரணமாக, குருநாத் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

தனது வறுமை நிலை பற்றி நண்பன் சாமுவேலிடம் சொல்லி வருத்தப்படுவது குருநாத்தின் வழக்கமாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்ற குருநாத், திடீரென பூச்சி மருந்து வாங்கி, குடித்தார். இதைப் பார்த்த வேதனை அடைந்த சாமுவேல் நண்பனின் சோகத்தில் பங்கேற்பதாகக் கூறி மிச்சம் இருந்த பூச்சி மருந்தை அவரும் குடித்துள்ளார்.

இதில் 2 பேரும் மயக்கமடைந்தனர். அவர்களை சக மாணவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.