ஸ்டாலினிடம் தஞ்சம் அடைகிறார் தங்கதமிழ்செல்வன்..! செந்தில்பாலாஜி ஆபரேஷன் சக்சஸ்!

கொங்கு பெல்ட் பகுதியில் தி.மு.க. வெற்றி அடைந்ததற்கு செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுத்ததுதான் முக்கிய காரணம் என்று தி.மு.க. கருதுகிறது.


அதனால், மதுரை, தேனி பகுதிகளில்  சரிந்துகிடக்கும் தி.மு.க.வை நிலை நிறுத்த தங்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆபரேஷன் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த தேர்தல் நேரத்திலேயே இந்த பேச்சு தொடங்கப்பட்டது. அப்போது வரை எந்த முடிவும் எடுக்கமுடியாமல் இருந்தார் தங்கதமிழ்செல்வன். ஆனால், தேர்தலில் செந்தில்பாலாஜிக்குக் கிடைத்த மரியாதை, தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி போன்றவை அவருடைய மனதை மாற்றிவிட்டது.

இந்த லட்சணத்தில் தோல்விக்கு தன்னை குற்றம் சாட்டும் விதமாக தினகரன் குற்றம் சாட்டியதை தாங்கமுடியாமல் இருந்த தங்கம், தனக்கெதிராக தேனியில் கூட்டம் கூட்டப்படுவதை அறிந்து கொந்தளித்தார். அந்த ஆடியோவை வெளியிட்டு ஒருவழியாக தங்கத்தைக் கட்டம் கட்டிவிட்டார் தினகரன். இப்போது எங்கே போவது என்று திசை தெரியாமல் இருந்தார் தங்கம். அமைச்சர் தங்கமணி, வேலுமணி இருவரும் தங்கத்துக்கு ஆதரவாக இருந்தாலும் பன்னீர் இன்னமும் உத்தரவு கொடுக்கவில்லை.

அதனால் வழக்கம்போல் செந்தில்பாலாஜி பேசினார். அது மட்டுமின்றி சபரீசனை பேச வைத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்படும், தேர்தல் நேரத்தில் நன்றாக கவனிக்கப்படும் என்று சொல்லப்பட்டதம் தலையை ஆட்டிவிட்டாராம். அதனால் அதிவிரைவில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தஞ்சம் அடைகிறார் தங்கம்.