பார்த்திபனின் ஒத்தசெருப்பு படத்தை விமர்சனம் செய்கிறார் தங்கர்பச்சான்!

இப்போது சினிமாக்காரர்கள் சந்தித்துக்கொண்டால், பேசிக்கொள்ளும் விவகாரம் பார்த்திபனின் ஒத்தசெருப்பு படத்தைப் பற்றித்தான்.


ரஜினி தொடங்கிவைத்த இந்த விவகாரம் இப்போது தெருத்தெருவாய் நடக்கிறது. பிரபல இயக்குனரும் நடிகருமான் தங்கர்பச்சான் பார்த்திபன் படத்த்திற்கு செய்திருக்கும் விமர்சனம் இது. முன் திரையீட்டுக்காட்சியில் "ஒத்த செருப்பு அளவு 7" திரைப்படைத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்காக மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர்களால் அத்திரைப்படம் குறித்து பேச,எழுத படத்தைத் திரையிட்டுக் காண்பிக்க வைப்பது திரைத்துறையில் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

படம் பிடிக்காமல் போனால் உண்மையை மறைத்து மக்களிடத்தில் பொய்யான கருத்தை தெரிவிக்க பயந்தே அந்தப்பக்கம் செல்வதையே நான் தவிர்த்து விடுவேன். நான் மதிக்கும் எனது சிறந்த நண்பரான திரு பார்த்திபன் அவர்கள் நான்கைந்து முறையாக அழைத்தும் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் செல்லமுடியவில்லை. திரைப்படத்துறையில் ஈட்டிய பொருட்களை இத்துறையிலேயே தொடர்ந்து முதலீடு செய்பவர் அவர்.

குருவிபோல சேர்த்துவைத்த சொத்துக்களைக்கூட மீண்டும் அதிலேயே போட்டுவிட்டு நம்பிக்கையோடு செயல்படுபவர். ஏற்கெனவே பொருளாதாரச் சிக்கலில் தவிப்பவருக்கு இது தேவையா எனும் கோபத்தில்தான் இருக்கையில் அமர்ந்தேன். படத்தில் பார்த்திபனைத்தவிர வேறு நடிகர்கள் இல்லை எனும் செய்தியை உடன் வந்திருந்த என் மனைவியிடம் சொல்லவில்லை.

அரங்கினுள் நுழைகின்ற போது எந்த கேமராக்களை பார்க்கக்கூடாது என பயந்தேனோ அந்த கேமராக்கள் தான் என்னை வரவேற்றன. போகும்போது இந்த கேமராக்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்பது தெரிந்து விட்டது. என்ன பதிலைச்சொல்லி நழுவலாம் எனும் சிந்தனையிலேயே படத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அத்துடன் என் மனைவி நிலைமையை எண்ணி அச்சம் குடிகொண்டு விட்டது.

திரைப்படம் முடிந்தது! படம் சரியில்லை என்றால் பத்து நிமிடங்களிலேயே புறப்படச் சொல்லும் மனைவியைப்பார்த்தேன். என் கை விரல்களை இருகப்பற்றிக்கொண்டார். கண்கள் கலங்கி வழியத்தயாராக இருந்தது. தீராத நோயினால் அவதிப்படும் குழந்தையுடனும், அழகான மனைவியுடனும் பொருளாதாரத்தில் சிக்கி வாழ்க்கை நகர்த்த முடியாமல் போராடும் ஒரு ஏழையின் வாழ்க்கை இது! அவனது வாழ்க்கையை சிதைப்பவர்கள் திரையில் இல்லை.

நாம் தான் அவரவர்களுக்கான கற்பனையில் அவர்களின் குரலைக் கொண்டு மாசிலாமணி எனும் பாத்திரத்துடன் (பார்த்திபனுடன்) பயணிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளை திரைப்படம் முழுக்க விதைத்திருக்கிறார். கண்கள் கலங்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை!

ஒத்த செருப்பு ஓர் அனுபவம். மற்றவர்களின் கருத்தைக்கேட்டு கதை என்னவென்று கேட்டுவிட்டு கடந்து சென்றுவிடக்கூடிய படமல்ல. வாரந்தோறும் குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகின்றன. பெரும்பாலானப் படங்களில் அதுவும் அதிக பொருட்செலவில் உருவாக்கக்கூடிய படங்களில் பார்க்காத எதையும் புதிதாக எதையும் காணப்போவதில்லை. கதை மற்றும் உட்பொருள் இல்லாததால்தான் அப்படிப்பட்ட படங்களுக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இன்று வரை குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களை மக்கள் மனதில் நிற்கின்றன.

மக்களின் இரசனை உயரும்பொழுது சிறந்த படைப்புக்களை உருவாக்க வேண்டிய கடமை உருவாக்குபவர்களுக்கு இருக்கின்றது. ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்கள் பொருளாதாரத்தில் வெற்றியடையும்பொழுது இக்கலையும்,மக்களின் இரசனையும் மேன்மையடைகின்றன. அதனால் மேலும் மேலும் புதுமையானப் படைப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்!

விடைபெறும் முன் பார்த்திபன் அவர்களை கட்டித்தழுவி "நம்பிக்கையோடுச் செல்லுங்கள்; இவ்வளவு உயர்ந்த நடிகனை முழுமையாக நான் கையாளவில்லையே" என என் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு வந்தேன். என் மனைவியும் அதே கருத்தைச்சொல்லிவிட்டு வந்தார்.

"ஒத்த செருப்பு அளவு 7" தேர்ந்த ஒரு படைப்பு. சிறந்த திரைக்கதை, உருவாக்கம்,வடிவம் என அனைத்திலும் புதுமை நிரம்பி வழிகின்றது. அனைவரையும் கவரும் இந்தக்குடும்பக்கதை ஒவ்வொரு எளிய மனிதனையும் கவரும் என்பது உறுதி. ஒரு தமிழ்த்திரைப்படத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்த்துச் செல்கிறோமோ அனைத்தும் புதிய வடிவத்தில் இருக்கின்றது.

இந்த அனுபவத்தை அனைவரும் அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். நண்பர் பார்த்திபன் ஒரு சிறந்த நடிகனாக,படைப்பாளனாக உயர்ந்து நிற்கின்றார்;தமிழகத்திற்கும்,திரைப்படத்துறைக்கும் பெருமை சேர்க்கிறார்!