நிர்மலா சீதாராமனை அடிச்சுத் தூக்கிய அழகான தமிழச்சி... கலக்கலான கன்னிப்பேச்சு!

என்னடா, இத்தனை நாளா நம்ம அழகான தமிழச்சி நாடாளுமன்றதுக்குப் போயும், எந்தப் பேச்சையும் காணோமே என்று ஏங்கிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் கன்னிப் பேச்சை பேசியிருக்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.


நாடாளுமன்றத்தில் அவர் பேசத் தொடங்கும்போது, `யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்த கணியன் பூங்குன்றனாரின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன் என்றார். அதோடு, ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற திருவள்ளுவர், திராவிட சித்தாந்தத்தில், தமிழ் கலாசாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் தமிழ் மண்ணிலிருந்து வந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்து தி.மு.க.வினரிடம் மட்டும் கைதட்டல் வாங்கினார்.

அப்புறம் வழக்கம்போல் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கும், கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி சொன்னார். அடுத்து வழக்கம்போல் ஸ்டாலின் புகழ் பாடத்தொடங்கவே, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியதும், கன்னிப்பேச்சை யாரும் தடுக்கக்கூடாது என்று மேலும் சில நிமிடங்கள் ஜால்ரா போட்டுவிட்டு பேசத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் பெண் என்ற அளவில் பாராட்டு வழங்கியவர், அதன்பிறகு வெளுத்து வாங்கத் தொடங்கினார். ‘‘இந்திய நாடு, முற்றிலும் தொழிலாளர்களின் உழைப்பினால் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, தொழிலாளர்களுக்கு பெரும் கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு கார்ப்பரேட்களுக்கும் தனிப்பெரும் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை அளித்திருக்கிறது. இந்த அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றைத் திணித்து கஷ்டத்தை கொடுத்துவருகிறது.

 பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பெண்கள் தாலிக்குத் தங்கம் வாங்குவதுகூட கனவாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது’’ என்று பேசினார். இவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. தி.மு.க.வுக்கு ஜால்ரா போடுவதற்குப் பதில், பா.ஜ.க.வை வெளுத்து வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது.