முகிலன் விவகாரத்தில் திட்டுபவர்களுக்கு தாமரை மீண்டும் சூடு!

முகிலன் காணாமல் போன காரணம் எனக்கு நன்றாகவே தெரியும் என்று தாமரை போட்ட பதிவு கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.


போராளிகள் பெண்களை பொறுக்குகிறார்கள் என்று சொன்னதற்கும் கடும் எதிர்வினை வந்தது. இந்த சூழலில் மீண்டும் தாமரை ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். முகிலன் காணாமல் போய்த் திரும்ப வந்ததே கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பேசுபொருளாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து என் முகநூலில் நான் எந்தப் பதிவும் இடவில்லை. ஆனால் கண்ணில் பட்ட வேறு சிலரின் பதிவுகளில் கருத்திட்டிருந்தேன். அவை முகிலனுக்கு எதிராக அமைந்தவை. அதை சட்டகப்படம் எடுத்து நிறையப் பேர் பகிர்ந்திருந்தனர்.

அந்த அளவில் நன்மையே !. ஆனால், சந்தடிசாக்கில், நான் சொல்லாதவற்றையும் சொன்னதாக புதிதுபுதிதாக தாங்களே எழுதி, என் பெயரில் வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதையும் உண்மையென்று நம்பிக் கொண்டு பலரும் பகிர்ந்து, ஆபாச அர்ச்சனைகள் புரிந்து தத்தம் தரங்களைக் காட்டிக் கொண்டுள்ளனர். 

ஊரில் ஒரு புறமாக அலை அடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்த்திசையில் நீந்துவதென்பது எப்படிப் பட்டது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதைச் செய்யக் காரணம், நான் உண்மையின் பக்கம் நிற்க வேண்டுமென்பதே. நான் பாதிக்கப்பட்டபோது, உண்மை அறிந்தவர்கள்கூட வாய்மூடி மௌனமாக இருந்ததன் வலியை அனுபவித்து அறிந்தவள்!. 

நான்கூட முகிலன் காணாமல் போனபோது பதைபதைத்து 'முகிலன் எங்கே?' என்று பதிவிட்டவள்தான். அதன்பிறகு அது தொடர்பானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு விவரங்கள் அளித்தபிறகு, அவற்றின் நியாயம் உணர்ந்து அந்தப் பதிவை நீக்கி விட்டேன். போராளிகள் எல்லோரும் பொறுக்கிகள் என்று நான் சொன்னதாக ஒரு தடவல்படம்  வெளியாகி பலரையும் கொந்தளிக்க வைத்து விட்டது. அவ்வாறு நான் எங்கும் சொல்லவில்லை என்பதறிக. 

தியாகு, முகிலன் போன்றவர்கள் போலிப் போராளிகள் !. தங்களுக்கிருக்கும் போராளிப் பிம்பத்தை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தியவர்கள்/படுத்துபவர்கள். இவர்களைப் போன்ற போலிகளால் இவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தவர் மட்டுமன்றி நம்பி வந்த ஆதரவாளர்கள், முன்னெடுக்கும் சமூகப் போராட்டங்களுக்கும் பெருத்த சேதாரம் !. ஆதரவு திரள்வதற்குப் பதிலாக, பொதுமக்களிடம் கெட்டபெயரே கிடைத்து, போராட்டங்களுக்கும் பின்னடைவே ஏற்படும்.

தியாகு, முகிலன் ஆகியோர் போலிப் போராளிகள், அவர்களை அடையாளம் கண்டு விலக்குங்கள் என்பதே என் கருத்தின் சாரம். இவர்களைப் பற்றி மட்டும்தான் நான் கருத்திட்டிருக்கிறேன் என்பதை இந்தப் பதிவின்மூலம் அறிவிக்கிறேன். தியாகுவால் நான் நேரடியாகப் பாதிக்கப் பட்டிருக்கிறேன், அவரது ஒழுக்கமற்ற செய்கைகளைக் கண்ணுற்ற சாட்சி என்கிற வகையில், மேற்கண்ட 'போலிப் போராளி, பொறுக்கி' வகையிலான அறிவிப்புச் செய்வதற்கு எனக்கு எல்லாவிதத்திலும் தகுதி இருக்கிறது.  

முகிலன் விவகாரத்தில் எனக்கு நேரடித் தொடர்பு எதுவுமில்லை எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணோடு பேசியதில் அவர் கூற்று உண்மை என்பதையும் அந்தப் பெண் தவறானவரில்லை என்பதையும் ஐயந்திரிபற உணர்ந்து கொண்டேன். 

தியாகுவுக்கும் முகிலனுக்கும் இந்த விவகாரங்களில் பலப்பல ஒற்றுமைகள் இருப்பது கண்டு வியந்து போனேன். போராட்ட களத்தைத் தங்கள் வேட்டைக்களமாக மாற்றுவதில் என்னவொரு வியக்கத்தக்க 'செயல்பாடு' என்று அதிசயித்தேன். இருவரின் செயலாக்கமும் ஒன்றாகவே இருந்தது கண்டு, ஒருவேளை, இவர்களின் 'போராளிப் பயிற்சிப் பட்டறையில்', 'பெண்களை வளைப்பது எப்படி ?' என்றொரு பாடப்பிரிவே இருக்குமோ என்கிற அளவுக்கு ஐயமே ஏற்பட்டு விட்டது. 

இருவர் விவகாரங்களிலும் ஒரு வேறுபாடு என்னவெனில் நான் தியாகுவின் சட்டபூர்வமான மனைவி (இன்றுவரை)!. அந்தப் பெண் இசை திருமணம் ஆகாதவள். நான் மனைவி என்பதால், கணவன்மேல் எந்த மோசடி/ஏமாற்று வழக்கும் தொடுக்க முடியாது, அவரால் கையாளப்பட்ட பெண்கள்தாம் (ஒரிருவர்) தொடுத்திருக்க முடியும்.

அப்படி யாரும் தொடுக்க முன்வரவில்லை என்பதோடு, என்னிடம்தான் வந்து தாங்கள் கையாளப்பட்ட கதைகளை எடுத்தியம்பி நியாயம் கோரினர். இசை மனைவியல்லாதவர் என்பதால் வழக்குத் தொடுத்திருக்கிறார். இப்படி ஒருபெண்ணாவது, சமூகத்தின் பார்வையில், தான் அழிந்து போனாலும் அட்டியில்லை என்று துணிந்து முன்வந்ததைக் கண்டு பிரமிக்கிறேன். அவர் பக்கம் நிற்க உறுதி பூணுகிறேன். 

முகிலன் காணாமல் ஆக்கப்படவில்லை, பெண்விவகாரத்துக்குப் பயந்து தலைமறைவு ஆனார் என்பதும், அது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நாடகம் என்பதும் எங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். எங்களுக்கு மட்டுமல்ல, முகிலன் எங்கே என்று முழக்கம் போட்ட பலருக்கும் தெரியும் என்பதே கசப்பான உண்மை !.

முகிலனின் துணைவியார் பூங்கொடி அவர்களின் நிலை அனுதாபத்துக்குரியது. புரிந்து கொள்ளக் கூடியது !. கணவனின் தரங்கெட்ட செய்கைகளுக்கு, தான் தலைகுனிய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப் பட்டவர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு, தியாகுவின் மனசாட்சியற்ற செய்கைகளால் நான் விக்கித்துப் போய் நின்ற நிலையில் ஏறத்தாழ இப்போது அவர் இருக்கிறார். கல்லூரி செல்லும் மகனின் நன்மையைக் கருதிப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளார். எத்தகைய சமூக அவமானத்துக்குள்ளாக வேண்டியிருக்கும் என்பது, சிறுவன் சமரனை வைத்துக் கொண்டு தெருவில் அமர நேர்ந்த அவலத்துக்குள்ளான எனக்கு நன்றாகவே தெரியும்.

தியாகு தொடர்பான பல செய்திகள் சொல்லப்படக் காத்திருக்கின்றன. ஆனால் அதற்கு இது தருணமில்லை, தளமுமில்லை. நேரம் வரும்போது வெளியாகும். ஆனால் சமூக அக்கறையோடு போராட வரும் பெண்கள், தியாகு/முகிலன் போன்ற இரக்கமற்ற அரக்கர்கள் உலவும் இடம் இது என்பதறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் !. எங்களைப் போன்று இனி எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது.

போராட்ட அரசியலில் உள்ளவர்கள் 'அறம்' என்றொரு சொல்லை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். தாங்கள் பிறரிடம் காட்டாத அறத்தைத் தங்களுக்குப் பிறர் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று பொங்கியிருக்கிறார் கவிஞர் தாமரை.