ஆளுக்கு ஒன்று என பிரித்துக்கொள்வதாக எடப்பாடியும் பன்னீரும் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வின்போது முடிவு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால், திடீரென இரண்டையும் கைப்பற்றி பன்னீர் தலையில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார் எடப்பாடி.
பன்னீரை வீழ்த்திய தளவாய் சுந்தரம்! எடப்பாடி எஸ்கேப் பாலிடிக்ஸ்!

விக்கிரவாண்டி எடப்பாடிக்கும், நாங்குநேரி பன்னீருக்கும் என பேசப்பட்டு இருந்ததால், மனோஜ் பாண்டியன் மிகவும் குஷியாக இருந்தார். பத்துப் பைசா கூட செலவழிக்காத மனோஜ் பாண்டியன் ஏன் குஷியாக இருக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது. இந்தத் தொகுதியை பிரஸ்டீஜ் விஷயமாக அ.தி.மு.க. எடுத்துக்கொள்ளும் என்பதால் ஏகப்பட்ட கோடிகளைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். அதில் ஓசியாக குளிர் காயந்துகொள்ளலாம் என்று நினைத்தார் மனோஜ்.
அதனாலே இரண்டு தொகுதிகளையும் இரண்டு பேர் கைகளில் கொடுத்துவிட்டு எடப்பாடி எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆம், விக்கிரவாண்டியை சி.வி.சண்முகம் கையிலும், நாங்குநேரியை தளவாய்சுந்தரம் கைகளிலும் ஒப்படைத்துவிட்டார். வெற்றி, தோல்வி என எதுவானாலும் நீங்கள்தான் பொறுப்பு என்று கூறிவிட்டாராம்.
அதேபோன்று பன்னீரிடம், உங்களுக்கு நாங்குநேரியில் யாரை வேட்பாளராக போட வேண்டுமோ, அதை தளவாயிடம் சொல்லிவிடுங்கள் என்றாராம். அவரிடம் போய் நான் ஏன் கேட்பது, வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார்கள் என்பதால் அப்படியே போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டார் பன்னீர்.
இதற்காகவே காத்திருந்த தளவாய் சுந்தரம், தனது ஆதரவாளர் ரெட்டியார் பட்டி நாராயணனுக்கு சீட்டை வாங்கிவிட்டார். இவர் பணம் செலவழிப்பார் என்பதுடன் சமூக ரீதியிலும் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால், மனோஜ் பாண்டியன் கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் தளவாயின் பரிந்துரையான நாராயணனோ இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் நாங்குநேரியில் பரவலாக இருக்கும் அய்யாவழி வகையறாவைச் சேர்ந்தவர்.
ஆக, பன்னீரை தன்னுடைய வழியில் இருந்து விரட்டுவதில் எடப்பாடி வெற்றி அடைந்துவிட்டார். இடைத் தேர்தலிலும் ஜெயிப்பாரா..?