தென்காசிக்கு ஜாலி! நெல்லைக்கு தொல்லை! புதிய மாவட்ட விவகாரம்!

புதிதாக உதயமான தென்காசி மாவட்டம் குறித்து, அந்தப் பகுதி மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.


குற்றாலம் உள்ளிட்ட பெருமைகள் பறிபோன கவலையில் நெல்லை இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாவட்டம் பிரிப்பதால் ஏற்படும் தொல்லைகளும் இருக்கத்தானே செய்கிறது என்கிறார் பேராசிரியர் ராமசாமி. இதோ அவரது பதிவு. நெல்லை மாவட்டத்தின் பெருமைகள் பலவற்றைத் தென்காசி கடத்திக் கொண்டு போகப்போகிறது. மலைகள், அருவிகள், அணைகள்,ஆறுகள், குளங்கள் வயல்கள் என இயற்கையின் கொடையெல்லாம் கைமாறப்போகிறது. காதல் பாட்டுப்பாடச் சினிமா நாயகிகளும் நாயகர்களும் தென்காசிக்குப் போய்விடுவார்கள். என்றாலும் தென்காசிக்காரர்கள் பாவம் தான்.

இந்த டிஜிட்டல் உலகத்திற்கு மாறியாகவேண்டும். ஆதார் தொடங்கி எல்லா அடையாள அட்டைகளிலும் மாற்றம் செய்தாக வேண்டும்.ரேசன் வாங்க ஸ்மார்ட் கார்டு, மானியம் வாங்கவும் கடன் வாங்கவும் வங்கி அட்டைகள், பொதுப்போக்குவரத்துகளுக்குரிய மானிய விலை அட்டைகள், விவசாயக்கூலி அட்டை, பீடித்தொழிலாளி அட்டை, அரசுப்பணியாளர் அட்டை, தனியார் தொழிலாளர் அட்டை, கல்வி வளாகங்களுக்கான அட்டைகள், வருகைப்பதிவைக் கீறிச்செல்லும் நுழைவு அட்டைகளென எத்தனை அட்டைகள்.

ஒவ்வொரு அட்டையிலும் மாவட்டத்தைக் குறிக்கும் எண்ணிற்கு வழங்கப்படும் குறியீட்டுக்கு மாறவேண்டும். நெல்லைப் பதிவு எண் 72 எனப் பதிவுசெய்த வாகனங்களின் முன்னும் பின்னும் புதிய எண்களோடு நகரவேண்டும். மாவட்ட எல்லை தாண்டியெல்லாம் கல்லூரிக்கு அனுப்பமுடியாது எனச் சொல்ல முற்படும் பெற்றோர்களைப் பெண் பிள்ளைகள் எப்படிச் சமாளித்துப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வரப்போகிறார்களோ தெரியவில்லை.

திருநெல்வேலி -தென்காசி 50 கிலோமீட்டர். என்றாலும் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் குறையாமல் விபத்துக் காப்பு வாகனங்களின் பேரொலிக்கு வழிவிட வேண்டியதிருக்கும். 108 எண்ணிட்ட அரசு வாகனங்கள் மட்டுமல்ல. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவ மனைகளுமென அவசரப்பணி வாகனங்களால் இந்தச் சாலையின் ஒலிவேகத்தைக் கூட்டியிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தலைமை இடமான மேட்டுநில மருத்துவ மனைக்கு வரும் வாகனங்கள் காதில் கிறுக்கிக் கொண்டே செல்லும். தான் எழுதிய கதையொன்றிற்கு இரைதேடும் பறவைகள் என்று குறியீட்டுத் தலைப்பொன்றைத் தோப்பில் முகம்மது மீரான் வைத்திருப்பார். ஓலமிடும் வாகனங்கள்; உயிர் சுமந்து உடல் சுமந்துஓடும் வேகமும் நிறுத்தும் சடக்கொலியும் இந்தச் சாலையைச் சங்கொலிச்சாலையாகவே ஆக்கியிருந்தன. அந்தச் சத்தங்கள் இனிக் குறையக் கூடும்.

மாவட்டம் பிரிக்கப்பட்டுவிட்டது.மாவட்ட ஆட்சியரும் காவல்துறைக் கண்காணிப்பாளரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடும். அதே வேகத்தில் தென்காசிக்கென மாவட்டத் தலைமை மருத்துவமனை வரவேண்டும். அம்மருத்துவ மனைக்கான மருத்துவக்கல்லூரி ஒன்றும் வரவேண்டும். வந்துவிட்டால் சங்கொலி எழுப்பும் அந்த வாகனங்கள் நெல்லைக்குள் அலறியடித்துக் கொண்டு நுழையப்போவதில்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனை மட்டுமல்ல; மாவட்ட மையநூலகம், நீதிமன்றங்கள், மாவட்ட அடையாளத்தோடு கலைஞர்கள், எழுத்தாளர்கள் திரளவேண்டும். பொற்கிழிகள், பரிசுகள் பெற வேண்டும். அகத்தியன் வந்தமர்ந்த பொதிகை மலையும் அம்மலையைச் சுற்றித்திரியும் சித்தர்களும் கொண்டாடப்பட வேண்டும்.