கொட்டிய மழை! பெருக்கெடுத்த வெள்ளம்! செயற்கை காலுடன் தவித்த முதியவர்! முதுகில் சுமந்து நெகிழ வைத்த போலீஸ்காரர்!

தெலுங்கானாவில் தண்ணீரில் நடக்க முடியாமல் தவித்த செயற்கை கால் பொருத்திய நபரை முதுகில் தூக்கிச் சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குவதால் பல இடங்களில் வாகனங்கள் பழுதாகி தள்ளிக் கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி எங்கு பள்ளம் இருக்குமோ என்று பயந்தபடியே நடந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகின்றனர்.

இந் நிலையில் காலில் முறிவு ஏற்பட்டு செயற்கை கால் பொருத்தி உள்ள ஒரு முதியவர் தண்ணீரில் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவர் அவஸ்தை படுவதை பார்த்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லு அந்த முதியவரை குழந்தையை சுமப்பது போல் தன்னுடைய முதுகில் சுமந்தபடி அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்றார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லுவை பாராட்டினர்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லு உதவி செய்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில் நாகமல்லுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.