ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சரக்கு விலை..! குடிமகன்களுக்கு புத்தாண்டு முதல் காத்திருக்கும் அதிர்ச்சி!

ஐதராபாத்: தெலுங்கானாவில் மதுபானங்களின் விலை, 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தெலுங்கானா அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 60 மில்லி ஸ்காட்ச் பாட்டில் விலையில், ரூ.10 கூடுகிறது. அதேபோல, 2000 மில்லி ஸ்காட்ச் பாட்டில் விலையில் ரூ.440 கூடியுள்ளது.இதேபோல, 750 மில்லி பீர் பாட்டில் விலை ரூ.20 அதிகரிக்கப்படுகிறது. 2000 மில்லி ரம், வோத்கா உள்ளிட்டவற்றின் விலையும் ரூ.220 கூடுதல் உயர்வை சந்தித்துள்ளது. இதுவே, 750 மில்லி பாட்டில் விலை ரூ.80 கூடுதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  

இது மட்டுமின்றி, ஐதராபாத் எல்லைக்கு வெளியே நடைபெறும் சமூக, குடும்ப மற்றும் விருந்துகளுக்கு, ரூ.9000 வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, 4 நட்சத்திர விடுதிகளில் விருந்து நடைபெற்றால், ரூ.12,000 வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஐதராபாத் எல்லைக்கு உள்ளே நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரூ.12,000 வரியும், 4 நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு, ரூ.20,000 வரியும் நிர்ணயிக்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு குறிப்பிட்டுள்ளது.  

இப்புதிய விலை உயர்வு மற்றும் வரி நிர்ணயம் காரணமாக, ஆண்டுக்கு, ரூ.400 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என தெலுங்கானா அரசு மதிப்பிட்டுள்ளது.