உதவிப் பேராசிரியர் நியமனத்தில் 700 கோடி ரூபாய் ஊழல்..! நீதிமன்ற விசாரணை கேட்கும் கம்யூனிஸ்ட்

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமான அரசு ஊழியர் தேர்வு மற்றும் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இதைப் பற்றி உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், பி.சம்பத், உ. வாசுகி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஊழல் பிரச்னை தொடர்பாக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

அந்தத் தீர்மானத்தின் விவரம். 

தமிழக அரசின் உயர்கல்வித்துறையில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. 

2,340 பணியிடங்களுக்கான இந்த நியமனத்தில் 700 கோடிக்கும் மேல் லஞ்சம் புரள்வதாக பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கு பல்வேறு அடுக்குகளில் இடைத்தரகர்களை நியமித்து, ஒரு நியமனத்திற்கு ரூ.30 லட்சம் என்ற வகையில் ரூ. 700 கோடிக்கு மேல் இந்த லஞ்சப்பணம் கை மாறியுள்ளது என தெரிகிறது. இது உதவிப் பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களிடையிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக கல்வித்துறையில் நடைபெறும் இந்த ஊழல் நடவடிக்கையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. லஞ்சம் கொடுத்து வரும் தகுதியற்ற பேராசிரியர்கள் எந்த அளவு தரமான கல்வியை வழங்குவார்கள் என்பதும் கேள்விக்குறியே. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரத்தையும் - மாணவர்களின் உயர்கல்வி தரத்தையும் பெருமளவில் பாதிக்கும். 

ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி.யின் “குரூப் -4” தேர்வு முறைகேடுகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட “குரூப் - 4” தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமான தொகை லஞ்சப் பணமாக கைமாறிய விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குரூப்-4 தேர்வு முறைகேடுகளின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது குரூப்-2 தேர்விலும் கையூட்டுகள் பெறப்பட்ட விபரங்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெளிவந்து கொண்டுள்ளன. 

தேர்வாணைய ஊழியர்கள், காவல்துறையினர், தனியார் பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள் என பலரும் இணைந்து பெரும் கூட்டு சேர்ந்து, அரசின் ஆதரவோடு இந்த ஊழல் முறைகேடுகளில் பின்னணியாக இயங்கி வந்துள்ளது தெரிய வருகிறது. 

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் லஞ்ச - லாவண்யங்கள் தலைவிரித்தாடி வருகின்றன. பல அமைச்சர்கள் மீது, உயர்மட்ட அதிகாரிகள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களும், வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் மேற்கண்ட முறைகேடுகள் தமிழக மக்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் ஊழல்சேற்றில் மூழ்கியுள்ளது என்பதற்கு இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளும், உதவிப்பேராசிரியர் நியமனத்தில் நடைபெறும் ஊழல்களும் கூடுதல் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

எனவே, உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான முறைகேடுகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து தாமதமின்றி விசாரித்து, ஊழல்-முறைகேட்டிற்கு காரணமான அனைவரையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இன்றைய அறிக்கை ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.