ஒரு டீ இனி ரூ.15! மிரள வைக்கும் விலை உயர்வு! அதிர்ச்சியில் டீ பிரியர்கள்!

சென்னை: டீ விலை உயர்ந்ததால் சாமானிய மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.


தமிழகம் முழுக்க ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, டீ, காபி விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பால் விலை உயர்வை கண்டித்து, டீக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். 

தமிழகம் முழுவதும் டீ, காபியை நம்பித்தான் சாமானிய மக்கள்  பலரின் வாழ்க்கை உள்ளது. குறிப்பாக, கூலி வேலை செய்யும் மக்களுக்கு, சாப்பாட்டை விட, டீ, காபிதான் முக்கியமான உணவாகும். சாப்பிடாமலேயே டீ, காபி குடித்துவிட்டு வேலை பார்ப்பவர்களும் உண்டு. 

ஆனால், திடீரென பால் விலை உயர்வதால், டீ, காபி விலையும் கிடுகிடுவென அதிகரிக்கும். இதனால், கிடைக்கும் குறைவான கூலியில் டீ, காபி குடிப்பதோடு, பஸ் போக்குவரத்திற்கும் அதனை செலவிட்டு, அந்த பணத்தை மிச்சப்படுத்தி குடும்பத் தேவைக்கு பயன்படுத்துவது என்பது இயலாத காரியம் என சாமானிய மக்கள் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். 

நடுத்தர மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு வேதனை அளிப்பது போல, சாமானிய மக்களுக்கு, டீ, காபி விலை உயர்வு வயிற்றில் அடிப்பதாக உள்ளதென்றும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

தற்சமயம், ஒரு டீ விலை ரூ.8 ஆகவும், காபி விலை ரூ.10 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது 15 ரூபாயாகவும், 20 ரூபாயாகவும் உயர் ஆரம்பித்துள்ளது.