டாஸ்மாக் வருமானம் உயர்ந்து வருவது குறித்து அமைச்சர் தங்கமணி சட்டசபையில் பேசியிருக்கும் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்ட் போட்டிருக்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம். இதோ, அந்தப் பதிவு.
வீட்டுக்கே வந்து மது சப்ளையா..? ஆஹா புதிய திட்டம்

தமிழக குடிமக்கள், வாழ்க தமிழகம் என்று வாயார வாழ்த்தி.. குவார்ட்டரைக் கவிழ்த்தி கொடுக்கிறார்கள் 30ஆயிரம்கோடி..!! நாங்கள் என்ன செய்ய.. கேட்கிறார் அமைச்சர்..
ஆம். அவர் என்ன செய்வார் பாவம். பாம்புக்கு வலிக்கக் கூடாது! அடிக்கும் தடியும் உடையக்கூடாது !! அடிப்பது போல் நடிக்கவும் வேண்டும்.!. பாம்பைப் பிடித்துவிடுவோம் பயப்படாதீர் என்று அவ்வப்போது கூவவும் வேண்டும் !! இது எவ்வளவு கடினமான காரியம்..
பாவம் என்ன செய்வார் அமைச்சர்..?? மதுபான ஆலை உரிமையாளர்கள் மனம் நோகக் கூடாது. குறிப்பாக அவர்களின் வருவாய் குறையக் கூடாது..!! பார் உரிமையாளர்களான கட்சிக்காரர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது..!! அரசுக்கு வருவாய் குறைந்துவிடக்கூடாது..!!
இப்படி எல்லாப்பக்கமும் கட்டையப் போட்டா அமைச்சர் என்ன செய்வார் பாவம்..!! சரக்கு மற்றும் சேவை வரியை பெருக்குவதற்கு முதலீடு பெருக வேண்டும். தொழில் நடக்க வேண்டும்
விவசாயம் செழிக்க வேண்டும்.இப்படி.. ஆயிரம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..!! ஆனால் சரக்கு வரி (டாஸ்மாக்) உயர மெனக்கெடவே வேண்டியதில்லை..!! இப்படி. நோகாமல் சம்பாதிக்க வழி இருக்க.. யார்தான் சரக்கு வரியை இழக்க சரியென்பார்கள்..!!
அமைச்சர் என்ன செய்வார்..பாவம்..? படிக்க நூலகங்கள் 4634 கொடுத்துள்ளோமே..!! அதில் போய்படிக்காமல் குடிக்க இருக்கும் கொஞ்சூண்டு கடைகளான 5262ஐப் பற்றி எல்லோரும் பேசுவதேன் என்கிறார் அமைச்சர்..
கரெக்ட்தானே.. படிக்கப் போகாமல்.. குடிக்கப்போன மக்களைக் குறைசொல்வதை விடுத்து தாயுள்ளத்தோடு செயல்படும் “அம்மா” அரசை விமர்சிப்பது எந்தவகையில் நியாயம்..?
பாவமல்லவா அமைச்சர்..!! சும்மா.. படிப்படியா மதுவிலக்குனா என்னனு கேட்டுத் தொல்லை பண்றாங்க.. அது என்னானு தெரிஞ்சா சொல்லமாட்டாரா அமைச்சர்..!! வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு..!! டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றுவழியென்ன மாற்றுவழியென்ன.. என்று பொதுவெளியில் பேசுகிறார்கள்..!!
ஆமா.. டாஸ்மாக் கடை வருமானம் ஸ்ட்ராங்கா இருக்கும்போது மாற்றுவழி பற்றி மக்கள் பேசுவது ஏன்..? அமைச்சருக்கு ஒரே குழப்பம்..!! அமைச்சரே...”..படிப்படியா மதுவிலக்குனு சொன்னீங்களே” ஓ... அதுவா..? அதுக்கு ஒரு மெகா பிளான் இருக்கு.. அடுத்த தேர்தல் அறிக்கையில் அது வெளியாகும்..
அப்படியென்ன.. மெகா திட்டம் அமைச்சரே..? அதுவா... படிப்படியா பண்றதைவிட ஒரேடியா எல்லா டாஸ்மாக் கடையும் மூட முடிவு பண்ணிட்டோம்.. அப்படியா.. சபாஷ்..!! இப்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்திவிட்டு..!! குடிகாரர்கள் யாரும் மக்களுக்கு
தொந்தரவு தராமல் குடிப்பதற்காக வீட்டுக்கு வீடு சாராயம் சப்ளை பண்ணும் திட்டத்தை தொடங்கப் போறோம்.. அதாங்க டோர் டெலிவரி..!! வீட்டுக்கு வீடு மின்சாரம் சப்ளை பண்ணும் என்னால்.. இது முடியாதா என்ன..என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சபாஷ்