சாவகாசமாக வீட்டுக்குள் திருடிய கொள்ளையன்..! குடும்பமே சேர்ந்து அமுக்கிப் பிடித்த சுவாரஸ்யம்

தமிழகத்தில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் ஒரத்தநாடு வியாபாரியிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாமல் போலீசில் சிக்கினார்.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நவதானிய வியாபாரம் செய்து வருபவர் பழனியப்பன். இவர் நேர்த்திக் கடனை செலுத்த குலதெய்வ கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். கோயில் வழிபாடுகள் முடிந்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பழனியப்பன்  அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் வந்தனர்.

அப்போது வீட்டின் கதவை திறந்தபடியே இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த பழனியப்பன் உள்ளே சென்று பார்த்தபோது ஒருவர் சாவகசமாக திருடிக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டு உரிமையாளரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். 

உடனே பழனியப்பன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அவரை பிடித்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த திருடனை பிடித்து அவனிடம் திருடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

வீட்டில் உண்டியல், பீரோ கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பழனியப்பன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த திருடனை கைது செய்தனர்.

பிடிபட்ட திருடன் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் எங்கும் நிலையாக தங்காமல் தமிழகம் முழுவதும் சென்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை அடிப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையன் ராஜேந்திரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் ராஜேந்திரன் தனியாக திருடி வந்தாரா அல்லது அவருக்கு பின்னால் ஏதேனும் பெரிய கும்பல் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜேந்திரன் பிடிபட்டது மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் பணம், நகையை தொலைத்தவர்களுக்கு ஏதேனும் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒரத்த நாட்டில் திருடனை பார்த்து பயப்படாமல் துணிச்சலுடன் ஒரு குடும்பமே பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. முடிந்தவரை வெளியூர் செல்லும் பொதுமக்கள் வீட்டில் அதிக அளவில் பணமோ நகையோ இருந்தால் வங்கி லாக்கரில் வைத்து விட்டு சென்றால் நாம் செல்லும் இடங்களுக்கு நிம்மதியாக சென்று வரலாம்.

சிலர் வங்கி லாக்கருக்கு வாடகை தரவேண்டுமே என யோசிக்கின்றனர். ஆனால் வீட்டில் இருந்து 100 சவரன் 200 சவரன் என கொள்ளை போகும்போது வங்கி லாக்கரின் வாடகை என்பது சொற்ப பணமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.