ஊரடங்கால் மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 500கிமீ நடந்த தமிழக இளைஞன் சுருண்டு விழுந்து பலி! அதிர்ச்சி சம்பவம்!

ஊரடங்கு உத்தரவினால் 500 கிலோ மீட்டர் வரை சொந்த ஊருக்கு நடந்து வந்த இளைஞர் வழியிலேயே உயிரிழந்த சம்பவமானது தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நம் நாடு முழுவதிலும் சமூக விலகலை கட்டாயமாக்குவதற்காக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமூக விலகல் தான் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரே வழி என்பதை உணர்ந்ததால் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தங்களுடைய சொந்த ஊர்களிலிருந்து கூலி வேலைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் லட்சக்கணக்கான பேர் புலம்பெயர்ந்த இடங்களிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு உண்ண உணவும், பணமும் கிடைக்காததால் தங்களுடைய சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் சுப்பிரமணி என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருடன் சேர்த்து கிட்டத்தட்ட 26 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு  சரிவர அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி ஆகாததால் போக்குவரத்து இல்லாததையும் அறிந்து 500 கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் துயரமான முடிவு மேற்கொண்டனர்.

3 நாட்களாக வெயிலை பொருட்படுத்தாமல் நடந்து வந்த அவர்கள் நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள செகந்திராபாத் நகரத்திற்கு வந்தடைந்தனர். 3 நாட்களாக வெயிலில் நடந்துவந்த தாக்கத்தினால் சமுதாய நலக் கூடத்தில் இவர்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தனர். 

அப்போது திடீரென்று லோகேஷ் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக கூட இருந்தவர்கள் மருத்துவரை அழைத்து வந்தனர். லோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அவருடன் இருந்த சகபயணிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இந்த செய்தியானது தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யோகேஷின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். உயிரோடு வீடு திரும்ப எண்ணிய லோகேஷ், சடலமாக வீடு திரும்பிய சம்பவமானது நாமக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.