தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் விவகாரம்..! பொங்கியெழுந்த வெல்லமண்டி நடராஜன்.

மதுரையை தலைநகராக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ அறிவித்து தமிழகத்தில் புதிய பரபரப்பு தீயை பற்ற வைத்தனர்.


அந்த தீ இப்போது திருச்சியிலும் பற்றியெரிகிறது. ஆம், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்ற எம்ஜிஆரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குரல் கொடுத்துள்ளார். 

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா முகக் கவசம் வழங்கும் விழா திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ’திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளது.எம்.ஜி.ஆர் திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என விரும்பினார்.ஆனால் அப்போது உடல் நல குறைவு காரணமாக மறைந்து விட்டார்.அதனால் அந்த திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.

தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் என்கிற கோரிக்கை எழுந்தால் திருச்சியை தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சர்கள் தேவையில்லாமல் எதையும் பேசக்கூடாது என்று தலைமை உத்தரவு போட்டிருக்கும் நேரத்தில், வீண் சர்ச்சையை எழுப்பிவருகின்றனர். இவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயுமோ..? விரைவில் கோவையை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் வேலுமணி எழுப்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.