டேய், செருப்பைக் கழட்டுடா..! சிறுவனிடம் தமிழக அமைச்சரின் ஆணவ அதிகாரம். வைரல் வீடியோ.

சிறுவனைக் கொண்டு செருப்பைக் கழற்றிய அமைச்சர் சீனிவாசன் - குழந்தையுரிமை, சமூக ஆர்வலர்கள் கொதிப்பு.


அரசமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்த இரகசிய காப்புப் பிரமாணத்தோடு பதவியேற்றுக்கொள்ளும் அமைச்சர் ஒருவரே, அரசு விழாவில் சிறுவன் ஒருவனை அழைத்து தன் செருப்பைக் கழற்றச்செய்திருப்பது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல, வனத் துறையைக் கவனிக்கும் சீனிவாசன்தான். நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இன்று காலை தொடங்கிய வனத்துறை யானைகள் பயிற்சி முகாமில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

முதலில் அச்சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றவைத்த அமைச்சர், அதில் எந்தக் கூச்சத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளாதது காணொலியில் நன்றாகவே தெரிகிறது. யாரோ ஒருவர் அதை தன் கைப்பேசியில் படம் எடுப்பதும் அதையடுத்து அமைச்சரை மறைத்து ஒருவர் நிற்க, அந்தச் சிறுவன் காணொலியில் இல்லாமல், அமைச்சரின் உதவியாளரே செருப்பைக் கழற்ற உதவுவதும் என சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

முன்னதாக, முதுமலையில் நடந்துவந்த அனைத்து தமிழ்நாட்டுக் கோயில் யானைகளுக்குமான புத்துணர்வு முகாம் கடந்த வாரம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வனத் துறையின் பராமரிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான முகாமே இன்று தொடங்கியது. இதன் ஆரம்பமாக அங்குள்ள கோயிலில் வழிபாடு தொடங்கும்போது, அதில் அமைச்சரும் பங்கேற்றார். அப்போதே தன் காலணியை அவர் கழற்றுவதற்குப் பதிலாக, பழங்குடியினச் சிறுவனையும் உதவியாளரையும் அவர் ஈடுபடுத்தினார்.

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இது குறித்த காணொலி பரவி, கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.