இந்தியாவிலே கொரோனா சோதனையில் தமிழகம்தான் முதலிடம்..! மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் எடப்பாடி பெருமிதம் …!

ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தொடர்கிறதா அல்லது முடிவுக்கு வருகிறதா என்பதை முடிவு செய்வது குறித்து முடிவு செய்வதற்காக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், ‘இந்தியாவிலே கொரோனா சோதனையில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது…’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘கொரோனாவை தடுக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளுடன் பல பகுதிகளில் ஊரடங்கு பாதுகாப்பாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக்கவசங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சிகிச்சைக்கு கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தாக்குதலில் இருந்து காக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

குணமடைந்தோர் விகிதம் 73 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா காலத்திலும் ரூ.30,500 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன. இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான்’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஊரடங்கு தளர்வு குறித்து, நாளை மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு தகவல் தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.