அதிரடியாக வரி விதித்த எடப்பாடி! எக்குத் தப்பாக உயரப்போகுது ஆம்னி பஸ் கட்டணம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயரப் போகிறது


சென்னை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயரப் போவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு, சாலை வரி மட்டுமே இதுவரை வசூலிக்கப்படுகிறது. இந்நி லையில், படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான, புதிய போக்குவரத்துத் துறை மசோதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளார். இதனால், படுக்கை வசதி உள்ள ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் கட்டணம் பன்மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏசி வசதி, விரைவான பயணம், குறைவான பயண நேரம் போன்றவற்றால் பலரும் சென்னை, சேலம், மதுரை, புதுச்சேரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, என எங்கு சென்றாலும் ஆம்னி பேருந்துகளை நாடுவது வழக்கமாகும்.

ஆனால், இவற்றின் டிக்கெட் விலை தமிழக அரசின் தற்போதைய முடிவால், கிடுகிடுவென உயரும் என, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். விலை உயரும் எனில் மக்கள் அரசுப் பேருந்து சேவைக்கே திரும்ப நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.