அரசு ஹாஸ்பிடலின் முதல் திருநங்கை நர்ஸ்! சாதித்து காட்டிய அன்பு ராஜ் எனும் அன்பு ரூபி!

தமிழகத்தில் முதன் முறையாக விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் செவிலியராக தனது பணியை தொடங்கி உள்ளார். இதற்கிடையில் இவருக்கு பொது மக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன் மடம் கிராமத்தை சேர்ந்தவர் தான் அன்பு ரூபி. அன்பு ரூபியின் பெற்றோர்கள் வழக்கமான பெற்றோர்கள் போல் அல்லமால் தனது மகன் திருநங்கையாக மாறிவிட்டார் என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அன்புடன் அரவணைத்து ரூபியை பள்ளி படிப்பை படிக்க வைத்துள்ளார். தனது கல்லூரி படிப்பிற்காக செவிலியர் அரசு கலந்தாய்வில் பங்கேற்று நெல்லை மாவட் டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.  

இதற்கிடையில், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார்.  

தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கடந்த 2-ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் செவிலியர் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல் திருநங்கை என்ற பெருமையுடன் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றார் அன்பு ரூபி.

மேலும் அவர் தனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியிலேயே பணி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசு அவருக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் சான்று வழங்கியது.

இந்நிலையில், நேற்று தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர் அன்பு ரூபி செவிலியரான தனது பணியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தொடங்கினார். அன்பு ரூபியை வரவேற்கும் விதமாக மருத்துவமணையில் உள்ள மருத்துவர், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய ரூபி, தனது பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்தார். மேலும், பலர் என்னை வெறுத்த போதும் பெற்றோர் என்னை அரவணைத்தனர். பல தடைகளை தாண்டி இன்று தமிழகத்தில் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் அன்பு ரூபி.

எனது தாய் விவசாய கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தார். நான் திருநங்கையாக உணர்ந்த போது கிராம மக்களும், உறவினர்களும் என்னை வெறுத்த போதும் பெற்றோர் என்னை அரவணைத்தனர். பள்ளியில் படிக்கும் போது பல தடைகளை சந்தித்தேன். அவற்றை தாண்டி இப்போது தமிழகத்தில் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். 

மேலும், என்னால் முடிந்த உதவியை எனது ஊர் மக்களுக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன் என்றும் கண் கலங்கி தெரிவித்தார்.