வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்ணாதீங்க! கெஞ்சும் தமிழக அரசு! ஏன் தெரியுமா?

`ஷவர்ல குளிக்காதீங்க; வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தாதீங்க என தமிழக அரசு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தில்தான் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பருவ மழை முற்றிலும் பொய்த்துவிட்ட நிலையில், இந்த ஆண்டும் பருவ மழை பெய்யவில்லை. இதனால் அனைத்து ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது.

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்துப் பேசியுள்ள சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.என். ஹரிஹரன், ``தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 133 மில்லியன் கன அடி நீரும், புழலில் 37 மில்லியன் கன அடி நீரும், சோழவரத்தில் 4 மில்லியன் கனஅடி நீரும், செம்பரம்பாக்கத்தில் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே  உள்ளது. 

இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 830 மில்லியன் லிட்டர் பொதுமக்களின் தேவைக்காக விநியோகம் செய்யப்படுகிறது. 

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறு, கல்குவாரிகள் ஆகியவற்றைக்கொண்டு தற்போது நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்களும் தண்ணீரை வீணாக்காமல் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். 

வீட்டில் ஷவரில் குளிப்பதை அனைவரும் குறைக்க வேண்டும். ஷவரில் குளிப்பதனால் ஒரு நாளுக்கு ஐந்து முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது சென்னையில் தண்ணீர் குறைபாடு இருப்பதால், அது தீரும் வரை பொதுமக்கள் ஷவர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும்போது அதைச் சுத்தப்படுத்த நிறைய தண்ணீர் செலவாகிறது. அதுவே இந்திய டாய்லெட் பயன்படுத்தினால் அதைச் சுத்தம் செய்ய ஒரு லிட்டர் தண்ணீரே போதும். இவ்வாறு குளிப்பதற்கு அதிக தண்ணீர் பயன்படுத்துவதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.