தண்ணி இருக்கு, ஆனால் உரத்தைக் காணோம்... வேதனையில் தமிழக விவசாயிகள். என்ன செய்கிறார் எடப்பாடி?

வழக்கமாக தமிழகத்தில் பருவ காலங்களில் அணைக்கட்டுகளில் போதிய தண்ணீர் இருப்பு இருக்காது.


அதனால் விவசாயம் செய்வதற்கு அச்சப்படுவார்கள். ஆனால், இப்போது தண்ணீர் இருக்கிறது, உரம் இல்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகிறார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் விடுத்திருக்கும் அறிக்கை இதோ. 

பருவமழை இந்த ஆண்டு சிறப்பாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தெரிவித்து வந்தது, சில தாலுகாக்களில் போதுமான மழை பெய்யவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் பெரும்பகுதியான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சம்பா சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அலைகழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இந்த ஆண்டு எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு இறக்குமதி செய்து இருப்பு வைக்காமல் அலட்சியமாக இருந்ததே இத்தகைய நெருக்கடிக்கும், பற்றாக்குறைக்கும் காரணமாகும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

உரிய காலத்தில் உரம் இடாமல் போனால் நட்ட பயிர்கள் பாதிக்கப்படும். நல்ல மழை பெய்தும் போதுமான நீர் இருந்தும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் அதற்கு தமிழக அரசின் அக்கறையற்ற போக்குதான் அடிப்படை காரணமாகும்.

எனவே, உடனடியாக தமிழகம் முழுவதும் தேவையான யூரியா விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் அவற்றை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் தேவையான யூரியா விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்காலஅடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று கேட்டுக்கொண்டுள்ளது.