தலித்துகளை புறக்கணிக்கிறது காங்கிரஸ்! ராகுலுக்கு எதிராக செல்வப் பெருந்தகை கோஷ்டி போர்க்கொடி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சியின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சீட்டு வழங்க கோரி அவருடைய ஆதரவாளர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எஸ்சி எஸ் டி பிரிவு மாநில துணைத்தலைவர் தாஸ்  பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலித் மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு மட்டும்  தங்களை பயன்படுத்துவதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி. எஸ் டி பிரிவு  மாநில தலைவராக இருக்கும்  செல்வபெருந்தகைக்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்காமல் புறக்கணித்து இருப்பதற்கு குற்றம் சாட்டியிருந்தனர். 

செல்வப் பெருந்தகைக்கு சீட்டு வழங்க கோரி  இன்று தமிழகம் முழுவதும் தமிழக காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த செல்வப் பெருந்தகை பசிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வப் பெருந்தகைக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட செல்வப் பெருந்தகை காய் நகர்த்தினார்.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக வேறு ஒருவரை அறிவித்துவிட்டது. இதனால் ஏற்பட்ட எரிச்சலில் காங்கிரசில் உள்ள தனது ஆதரவாளர்களை செல்வப் பெருந்தகை தூண்டிவிட்டுள்ளார்.