தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகளை நேரில் அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.
உயிருக்கு போராடிய தந்தை! கல்லீரலில் பாதியை கொடுத்து காப்பாற்றிய மகள்! சென்னை நெகிழ்ச்சி!
புதுச்சேரியை சேர்ந்த 48 வயதுடைய முருகன் என்பவர் நோய்வாய்பட்டு அவரது கல்லீரல் முற்றிலுமாக பாதித்து விட்டது. அவருக்கு உடனே கல்லீரல் மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். இதற்காக மாற்று அறுவை சிகிச்சை மூலம் முளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.
ஆனால் அப்படி ஏதும் வாய்ப்பு உடனடியாக இல்லாததால் தந்தையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என நினைத்த அவரது 19 வயது மகள் நிவேதா தன்னுடைய கல்லீரலை தானமாக தரலாமா என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் சம்மதிக்க மருத்துவர்கள் லேப் ராஸ் கோப்பி சிகிச்சை முறை மூலம் மகளின் ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர்.
தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சை சென்னையில் முதல்முறையாக ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.22 லட்சம். மகளே கல்லீரலை கொடுத்து தந்தையை காப்பாற்றிய சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரையும் தலைமை செயலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.
இந்நிகழ்ச்சியில் நிவேதாவின் தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.