தலித் தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் தமிழக பா.ஜ.க.! - புதிய தலைவர் பின்னணி வியூகம்!

பல மாதங்களாக காலியாக இருந்துவந்த பாஜகவின் தமிழகத் தலைவர் பதவிக்கு எல்.முருகனை நியமித்து, அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


பா.ஜ.க.வில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் ஊகச்செய்தி ஊடகங்களிலும் இந்த நியமனமானது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், நன்கு அறியப்பட்ட தமிழக பா.ஜ.க. பிரமுகர்களில் யாராவது ஒருவரே இப்பதவிக்கு வரக்கூடும் என வலுவாகப் பேசப்பட்டது.

ஆனால், திடீர்த் திருப்பமாக, தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் துணைத்தலைவர் பதவி வகிக்கும் எல்.முருகனை, மாநிலத் தலைவராக்கி பா.ச.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க.வின் பல வகையான வழக்கமான உத்திகளாலும் தமிழ்நாட்டில் அக்கட்சியால் வேரூன்ற முடியாத நிலையில், பரவலாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைக் குறிவைத்து, தென் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குமரி அனந்தனின் மகள் மருத்துவர் தமிழிசையை மாநிலத் தலைவர் பதவிக்குக் கொண்டுவந்தது.

அவருடைய பதவிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் அக்கட்சிக்கு குறிப்பிடத்தகுந்த பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதையடுத்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மைய மாவட்டம் அல்லது எச்.ராஜா போன்றவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகனை தலைவராக்கியதன் மூலம் தனது தேர்தல் உத்தியை பா.ஜ.க. தலைமை மாற்றியிருப்பது தெரிகிறது. மருத்துவர் தமிழிசையைப் போலவே இவரும் அடையாளத்துக்காக இன்ன சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டாலும், அதன் மூலம் ஒரு பலனும் இல்லை;

கட்சியின் தலைமைக்கு அடக்கமான ஆளாகவும் - கட்சிக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை படைத்தவராகவும் இருப்பார் என்பதற்காகவே இந்தத் தேர்வு அமைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.