தமிழச்சி, கனிமொழி, தமிழிசை, ஜோதிமணி, சாருபாலா! ஐந்து பெண்களில் ஜெயிக்கப்போவது யாரு? துல்லியமான சர்வே ரிப்போர்ட்

தேர்தலில் யார் வெற்றிபெற்றால் என்னவென்று நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது.


நமது நிருபர்களை களம் இறக்கி முக்கியமான சில தொகுதிகளை மட்டும் நோட்டமிடச் சொன்னோம். முக்கியமான தொகுதிகள் என்றதும் பிரச்னைக்குரிய தொகுதிகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்கள் போட்டியிடுவதுதான் முக்கியமான தொகுதிகள். இந்தத் தொகுதிகளில் அவர்களுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு என்று சுற்றி வந்தோம்.

அழகான தமிழச்சிக்கு ஆபத்து: தமிழச்சி தங்கப்பாண்டியன் முதன்முதலாக தென்சென்னை தொகுதியி மூலம் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மேக்கப் போட்டுக்கொண்டு ஊர் ஊராக சுற்றி வருகிறார். அ.தி.மு.க. சார்பில் எதிர்அணியில் போட்டியிடும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அமைதியாக இருக்கிறார். என்னவென்று விசாரித்தால், கடைசி நேரத்தில் காசைக் குடுத்து கதையை முடிச்சுக்கலாம் என்கிறார். அதனால் அழகான தமிழச்சிக்கு ஆபத்துதான். 

சாருபாலாவுக்குச் சிக்கல்தான்: மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சாருபாலா இப்போது தினகரன் கட்சியில் திருச்சி தொகுதியில் நிற்கிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசரும், தே.மு.தி.க. கட்சியில் இருந்து இளங்கோவனும் மல்லுக்கட்டுகிறார்கள். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் சாருபாலாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. மேலும் முதல் ரவுண்ட் சுற்றுப்பயணமும் முடித்துவிட்டார். திருநாவுக்கரசர் இப்போது தி.மு.க. துணையுடன் வெகுவேகமாக முந்திவருவதால், சாருபாலா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இன்றைய நிலையில் சாருபாலாவுக்குச் சிக்கல்தான்.

கனிமொழியை விரட்டும் தமிழிசை: மிக எளிதாக வெற்றி பெறுவார் கனிமொழி என்பதுதான் பழைய நிலவரம். ஆனால், இப்போது இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்வது தமிழிசைக்கு ஆதரவாக மாறிவருகிறது. மேலும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களான அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் முட்டி மோதிக்கொண்டு இருப்பதால் கனிமொழி பிரசாரத்தில் கொஞ்சம் சுணக்கம் தென்படுகிறது. ஆனாலும், அக்கா கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதுதான் நிலவரம்.

பாவம் இந்த ஜோதிமணி: தேர்தல் நேரத்தில் மட்டும் எட்டிப் பார்க்கும் வேட்பாளர் என்று ஜோதிமணியை சொல்லலாம். எப்படியோ ராகுல் காந்தியின் மனதில் இடம் பிடித்துவிட்ட காரணத்தால் கரூர் தொகுதிக்கு சீட் வாங்கிவிட்டார். அங்கே இவரை எதிர்த்து நிற்கிறார் தம்பிதுரை. ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருப்பதால் காசுக்குப் பஞ்சமில்லாமல் அள்ளிவிடுகிறார். ஜோதிமணி சிரித்துசிரித்துப் பேசி ஓட்டு வாங்கமுடியும் என்று நினைக்கிறார். அதெல்லாம் நடக்குமா என்ன? தம்பிதுரையே முந்துகிறார்.