அமித் ஷா – மோடி – எடியூரப்பா! 3 பேரையும் தனி ஆளாக சமாளித்து கர்நாடக அரசை காப்பாற்றிய சிங்கிள் சிங்கம்!

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதனை தனி ஒரு ஆளாக முறியடித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார்.


கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா சென்றாலும் சென்றார் 10 எம்எல்ஏக்களை இரவோடு இரவாக தூக்கியது பாஜக. மேலும் ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்த நிலையில் குமாரசாமி அரசை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. சித்தராமையா இந்த விவகாரத்தில் தனக்கு சாதகமான ஆதாயம் கிடைக்கும் வகையில் அரசியல் செய்து கொண்டிருந்தார். குழப்பத்தை சாதகமாக்கி தான் மீண்டும் முதலமைச்சராக தனது ஆதரவாளர்களை கொம்பு சீவிக் கொண்டிருந்தார்.

இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தியும் கூட ட்வீட் செய்வதோடு நிறுத்திக் கொண்டார்.

இதனால் குமாரசாமி அரசு கவிழும் என்று எடியூரப்பா தேவுடு காத்துக் கொண்டிருந்த போது தான் களம் இறங்கினார் டி.கே. சிவக்குமார்.இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தி ஆனால் இவரை வளரவிடாமல் காங்கிரஸ் நிர்வாகிகளே உள்ளடி வேலை செய்து வந்தனர். ஆனால் இவற்றை எல்லாம் மீறி தற்போது கெத்து காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பாஜக உள்ளடி வேலை பார்த்த போது அம்மாநில எம்எல்ஏக்களை கர்நாடகா அழைத்து வந்த எவ்வித பிரச்சனையும் இல்லாமல் மீண்டும் அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வைத்தவர் சிவக்குமார். இதே போல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு அமைய காரணமாகவும் இருந்தார் சிவக்குமார். இவர் தான் தற்போது எடியூரப்பா மற்றும் அமித் ஷாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மராட்டியத்தை ஆள்வது பாஜக என்று தெரிந்தும் அங்கு சென்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதி முன்பு ருத்ரதாண்டவம் ஆடினார்.

தனி ஆளாக மும்பையில் சென்று காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்தே தீருவேன் என்று சிவக்குமார் காட்டிய கெத்து ஒரு கனம் எடியூரப்பாவின் நம்பிக்யையே ஆட்டிப்பார்த்துவிட்டது. இந்த சமயத்தில் தான் உச்சநீதிமன்றம் மூலமாக கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி தற்காலிகமாக நீங்கியுள்ளது. ஆனால் இது போன்ற குழப்பமான சூழலில் கர்நாடகாவில் காங்கிரஸ் என்று ஒன்று இருப்பதை சிங்கிள் சிங்கமாக காட்டியவர் சிவக்குமார் தான்.