ராஜேஸ்வரியும் முகிலனும் ஒருவரையொருவர் விரும்பி உறவு கொண்ட விவகாரம்தான், இப்போது சமூகப் போராளிகளுக்கு பெரும் தீனி.
சுசி கணேசனும் முகிலனும் ஒரே ஜாதி ஆண்களா! நீதிமன்றத்தில் லீனா... நீதி கேட்கும் கிருபா!
இந்த நிலையில் சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், பியூஷ் மனுஷ் பற்றி கிருபா முனுசாமியும் தொடுத்த குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதுகுறித்து லீனாவுக்கும் கிருபாவுக்கும் ஆதரவாக வலைதளத்தில் பொங்கும் குரல் இது.
லீனா மணிமேகலை மற்றும் கிருபா முனுசாமி இருவரும் பொதுவில் தொடர்ந்து சந்திக்கும் அவதூறுகளைக் கவனித்து வருகிறேன். லீனா, சுசி கணேசன் தன்னிடம் பாலியல் அத்து மீறியதை, தேவையென்றுணரும் பொழுதில் பொதுவில் அம்பலப்படுத்துகிறார். கிருபா முனுசாமி, சில வருடங்கள் முன்பு பியுஷ் மனுஷ் தன்னிடம் பாலியல் ரீதியாக அருவருப்பாகப் பேசியதையும் அத்துமீறியதையும் பொதுவில் பகிரங்கப்படுத்துகிறார்.
இவர்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்ற கோணத்தில் மட்டும் நாம் இதை அணுகுவோமேயானால், இவர்களுக்கு முன்னால் பாலியல் புகாரளித்த பல லட்சம் பெண்களுக்கும், இன்னும் எழப்போகும் பல லட்சம் குற்றங்களுக்கும் கண்ணால் பார்த்த சாட்சியங்களைக் கோர வேண்டியதிருக்கும். பியூஷ் மனுஷ் மற்றும் சுசி கணேசன் இருவரும் எவ்வாறு இந்தப் பிரச்சனைகளை அணுகியிருக்கிறார்கள் என்று பார்ப்பது முக்கியம்.
லீனாவைத் தொடர்ந்து அமலா பாலும் சுசி கணேசனது அயோக்கியத்தனத்தை பொதுவில் பகிர்கிறார். ‘டியூ ப்ராசஸ்’, ‘டியூ பிராசஸ்’ என்று காட்டுக் கத்திக்கொண்டிருக்கும் நாம் கவனிக்கத் தவறியது, இங்கு ‘டியூ பிராசஸ்’ என்பதுதான் சுசி கணேசனுக்கு லீனாவின் மீது அவதூறு வழக்குப் பதிய உதவியிருக்கிறது. பாலியல் அத்துமீறல் என்ற அடிப்படை பிரச்சனை இன்று குற்றத்திற்கு நீதி கேட்கும் பெண்ணின் மீதான அவதூறு வழக்காக மாறுகிறது. தனக்கு நியாயம் கேட்டு பொது வெளிக்கு வந்தவர், இன்று தான் எழுப்பிய பிரச்ச்னைக்கு மட்டுமல்லாது, தன் பல வருட உழைப்பையும் பொதுவில் நீதி மன்றத்தில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காண்பித்துத் தன்னை நிரூபிக்க வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, கிருபா முனுசாமியின் மீது ஏவப்படும் அவதூறுகள் மிக மோசமானவை. இரண்டு மூன்று வருடங்கள் முன்பு பியூஷ் மனுஷின் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டை இன்று பியூஷ் மனுஷ் தனக்கு சாதகமான ஒரு பொழுதில் திசைதிருப்புகிறார். அவரது வீடியோவிலிருந்து கிருபா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ‘பேட்டர்ன்’ இருப்பதாகத் தெரிவிக்கிறார். அதாவது, பியூஷ் மனுஷ், முகிலன் போன்று அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அசிங்கப்படுத்தவும், அவர்கள் குரலை ஒடுக்கவும் இவ்வாறு பெண்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே ‘பேட்டர்ன்’ என்கிறார். பாலியல் குற்றங்கள் தொடர்பான உரையாடலை முளையிலேயே கிள்ளும் ஓர் ஆபத்தான வாதம் இது.
அதோடு இல்லாமல், கிருபா தன்னை அவதூறு செய்வதாகச் சொல்லிவிட்டு, இவர் கிருபாவின் நண்பர்கள் கிருபாவிற்குத் தெரிந்து ஏதோ நிலத்தை வாங்கியதாகக் குற்றம் சுமத்துகிறார். இதில் இரு கேள்விகள். உண்மையில் கிருபாவின் நண்பர்கள் நிலம் வாங்கியதாகவே இருந்தாலும், இதில் கிருபாவை எதற்கு அவர் இழுக்க வேண்டும். கிருபாவின் நண்பர்கள் அவருக்கு மட்டும் நண்பர்களா? அல்லது நண்பர்களின் செயற்பாடுகளுக்கெல்லாமும் இனி பொதுவில் இயங்கும் பெண்கள் பொறுப்பேற்க வேண்டுமா? இது முதல் கேல்வி.
இரண்டாவது, தான் பாலியல் அத்துமீறியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அதனால் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ செய்ததாகக் கூறப்படும் தொடர்பில்லாத வேறொரு செயலுடன் ஈடு செய்ய நாமென்ன பண்டமாற்று முறை காலத்திலா இருக்கிறோம்? பியூஷ் மனுஷ் பிரச்சனையை திசை திருப்புவதை விட்டுவிட்டு, நியாயமாக பதில் அளிக்க வேண்டும்.உண்மையில் பாலியல் குற்றம் இழைத்ததாகக் கருதப்படும் முகிலனுக்கு எதிராக மட்டுமல்ல, சுசி கணேசனுக்கும், பியூஷ் மனுசிற்கும் இதுபோன்று சமுதாயத்தில் தங்களுக்கிருக்கும் மதிப்பை பெண்ணை இழிவுசெய்யப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆணுக்கு எதிராகவும் நம் குரல்கள் ஒலிக்க வேண்டும்.
வேண்டியவர்களா வேண்டாதவர்களா, நமக்கு லாபமா, நஷ்டமா, இன்னபிற காரணங்களையும் அலசி பெண்ணியத்திற்காகக் குரல் கொடுப்பது பெண்ணியமாகாது. நாம் நம்பும் பெண்ணியத்தின் அற விழுமியங்களுக்காக ஒன்றிணைவோம். பாலியல் அத்துமீறல்களை எதிர் கொண்டதோடல்லாமல், அதை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக தங்கள் வாழ்நாளிற்கும் தங்களது உழைப்பையும், படைப்பாற்றலையும் மன நிம்மதியையும் அடகு வைத்துப் போராடும் லீனாவுடனும் கிருபாவுடனும் தோளோடு தோள் நிற்கிறேன்.