சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அமைச்சர் ஓஎஸ் மணியன் புறக்கணித்ததன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
விரைவில் சசிகலாவிடம் சரண்டர்! ஓஎஸ் மணியன் எடப்பாடியை புறக்கணித்ததன் பின்னணி!
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் தான் கலந்து கொள்ளவில்லை. ஒருவர் சிவி சண்முகம். அவர் தனது சகோதரர் மகன் விபத்தில் சிக்கிய வேதனையில் கூட்டத்திற்கு வரவில்லை. இதே போல் மற்றொரு அமைச்சர் ஓஎஸ் மணியனும் கூட்டத்திற்கு வரவில்லை. இது குறித்து அவரது தரப்பிடம் விசாரித்த போது அமைச்சரின் சொந்த ஊரில் ஒரு துக்கம் என்றும் அதில் கலந்து கொள்ள கடைசி நேரத்தில் அண்ணன் சென்றுவிட்டதாக கூறினார்கள்.
ஆனால் உண்மையில் இன்று ஓஎஸ் மணியன் ஊரில் எந்த துக்கமும் இல்லை. ஆனால் நாகையில் சிவசக்தி இன்டர்நேசனல் என்கிற பெயரில் ஒரு பள்ளிக்கூட திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓஎஸ் மணியன் கலந்து கொண்டார். சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் சமயத்தில் பள்ளித் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்கலாமா என்று விமர்சனங்கள எழுந்தன. அப்போது தான் அந்த பள்ளியே அமைச்சர் ஓஎஸ் மணியனுடையது என்பது தெரியவந்தது.
மிகவும் ஆசை ஆசையாக அந்த பள்ளியை கட்டியதாகவும் இன்று திறப்பு விழா என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. அதே சமயம் மணியன் அண்மைக்காலமாக எடப்பாடி தரப்பிடம் இருந்து விலகுவதாக கூறுகிறார்கள். விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மணியன் சசிகலாவின் மிகத் தீவிரமான விசுவாசியாக இருந்தவர்.
தற்போது தேர்தலில் எடப்பாடியால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்பதால் சசிகலா சிறையில் இருந்து திரும்பிய பிறகு அரசியல் மாற்றம் ஏற்படும் என்று மணியன் கருதுவதாக சொல்கிறார்கள். எனவே தான் எடப்பாடி தரப்பிடம் பட்டும் படாமல் இருப்பதாகவும் மீண்டும் திவாகரனுடனான தொடர்புகளை அவர் புதுப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.