மண்ணோடு மண்ணான சுர்ஜித் உடல்..! கிடைத்தது கைகள் மட்டும் தான்! ஆழ்துளை கிணற்றுக்குள் கடைசியில் நடந்தது என்ன?

சிறுவன் சுர்ஜித்தின் கைகள் மட்டுமே கிடைத்த நிலையில் சிதைந்து போன அவனது உடல் மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டது என்கிறார்கள் மீட்புபணியில் ஈடுபட்டவர்கள்.


சுமார் 90 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணி திங்கள் இரவு திடீரென நிறுத்தப்பட்டது. பிறகு சிறுவன் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் சுர்ஜித் உடல் மீட்கப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டது. 

ஆனால் அந்த சமயத்தில் ஊடகங்கள் யாரையும் ஆழ்துளை கிணற்றின் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. அத்தோடு மீட்பு படையை சேர்ந்த ஒருவர் கையில் ஊதா நிற கவரை வைத்துக் கொண்டு வேகமாக ஆம்புலன்சில் ஏறினார். அது தான் சுர்ஜித் உடல் என்று சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் சுர்ஜித் தயார் – தந்தை உள்ளிட்ட யாரும் அங்கு இல்லை.

பிறகு பிரேதப்பரிசோதனைக்கு பிறகு ஒரு சவப்பெட்டியில் வைத்து சுர்ஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை திறந்து கூட பார்க்காமல் நேராக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இப்படி சுர்ஜித் உடலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய காரணம் குறித்து மீட்பு படையில் ஈடுபட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டது.

அப்போது துர்நாற்றம் அதிகமான சமயத்தில் சுர்ஜித் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்தோம். இதனை அடுத்து சுர்ஜித் கைகளை ஏற்கனவே பற்றியிருந்த லாக் எந்திரத்தை இயக்கி உடலை மேலே எடுக்க முயற்சித்தோம். அப்போது வெறும் கைகள் மட்டும் தான் வந்தது. மேலும் கைகளும் மிகவும் சேதமாக இருந்தது.

அத்தோடு அந்த இடம் முழுவதும் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. இதனால் சிறுவன் உடல் சிதைந்து அது மேலும் கீழே சென்று இருக்கலாம் என்று முடிவெடுத்தோம். இதனை சுர்ஜித் உறவினர்களிடம் கூறினோம். அவர்களும் கைகளை மட்டும் வைத்து இறுதிச் சடங்குகளை செய்ய ஒப்புக் கொண்டனர். அதன் பிறகே ஆழ்துளை கிணற்றை மூடினோம் என்கிறார்கள்.