பெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது..! எடப்பாடி பழனிசாமி வரவேற்பு.!

அம்மாவின் வழியில் தொடரும் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. பெண்மைக்கு பெருமை சேர்க்கும் பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.


இந்த நிலையில், இன்று பெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது. 

அந்த தீர்ப்பில், ‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று 2005, இந்து வாரிசு உரிமை சட்டம் வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும் என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவதாகவும், சமூக நீதியை காப்பாற்றும் விதமாக அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.