கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி! ஆனால் தண்டனையை குறைத்தது உச்சநீதிமன்றம்!

மனைவியை விபச்சாரி என்று கூறிய கணவனை மனைவி கொலை செய்தது கொலைக்குற்றமாகாது என்று கூறி உச்சநீதிமன்றம் தண்டனையைக் குறைத்துள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்தவர் ரகிலா. இவருக்கும், இவரது கணவருக்கும் சண்டை வந்த போது கணவர் அதீத ஆத்திரத்தில் மனைவியை விபச்சாரி என்ற பொருளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. மனைவியை மட்டுமன்றி தங்கள் மகளையும் அவர் அவ்வாறே திட்டியதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் தகராறு முற்றியதையடுத்து அங்கு வந்த ரகிலாவின் கள்ளக் காதலன், கணவரை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், கணவன் கடுமையாக தகராறில் ஈடுபட்டதையடுத்து ரகீலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்தனர்.

 

40 நாட்களுக்குப் பின்னர் போலீசாரின் விசாரணையில் கணவனைக் கொன்றது மனைவியும் கள்ளக் காதலனும் எனத் தெரிய வந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. 

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தான கவுடர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் விபச்சாரி என்ற வார்த்தைகளை எந்தப் பெண்ணும் தனது கணவனிடம் இருந்து கேட்க விரும்புவதில்லை என்றனர்.

 

   அதை விட முக்கியமாக எந்தப் பெண்ணும் தனது மகளுக்கு எதிராக அதுபோன்ற வார்த்தையைக் கேட்க விரும்புவதில்லை என்ற நீதிபதிகள், எனவே இதனை கொலைக்குற்றமாக கருத முடியாது என்றும் திடீர் ஆத்திரத்தில் நேர்ந்த எதிர்பாராத சம்பவமாகவே கருத முடியும் என்றும் கூறி ரகிலா மற்றும் அவரது காதலனின் தண்டனையை 10 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தனர்.