உள்ளாட்சிக்குத் தேர்தலுக்கு தேதி குறிக்கும் உச்ச நீதிமன்றம்! தடுத்து நிறுத்தத் துடிக்கும் அரசியல் கட்சிகள்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் என்று அ.தி.மு.க.வும், வெற்றிபெற்றே தீருவோம் என்று தி.மு.க.வும் வீராவேசமாகப் பேசிவந்தாலும், தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் அத்தனை அரசியல்வாதிகள் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிகிறது.


 இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கம்போல் ஒரு கெடு விதித்துள்ளது. தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள், 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கட்சி ரீதியில் தேர்தல் நடைபெறும்.

கிராம பஞ்சாயத்துக்கள் பெரும்பாலும் கட்சி சார்பின்றி நடைபெறும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் நடத்துமாறு உச்சநீதிமன்றம் ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதில் நான்கு மாதங்கள் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மாநில தேர்தல் ஆணைய வக்கீல் பி.எஸ்.நரசிம்மன், மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டார். ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. 

அடுத்து தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, “தொகுதி வரையறை இன்னமும் முடியவில்லை. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை’’ என்று சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தது.

இதனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்போதைக்கு டிசம்பர் 2ம் தேதி என்று அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம், மீண்டும் நேரம் கேட்கவே வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் மூலம் தடை போடுவதற்கு பல்வேறு அமைப்பினர் முயற்சி எடுத்துவருவதாகவும் தெரிகிறது. அதனால், இப்போதைக்கு நடக்காது என்பதில்தான் கட்சியினர் உறுதியாக இருக்கிறார்கள்.