கோடி கோடியாக சம்பாதித்தாலும் கூகுள் சுந்தர் பிச்சையின் தினசரி காலை உணவு என்ன தெரியுமா?

டெல்லி: கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தினசரி காலை என்ன செய்வார் என்பது பற்றிய ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி, ஆல்ஃபாபெட் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் இரண்டிற்கும் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படும் சுந்தர் பிச்சை, தனது  காலை நேர செயல்பாடுகள் என்னென்ன என்பது பற்றி Recode வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  

இதன்படி, தினசரி அதிகாலையில் 6.30 அல்லது 7 மணிக்கு எழும் சுந்தர் பிச்சை, தேநீர் மற்றும் ஆம்லெட் சாப்பிடுவாராம். பிறகு, ஒரு பிரெட் டோஸ்ட் சாப்பிடுவாராம். இதன்மூலமாக, தனக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதாகவும், அன்றைய நாள் நல்ல முறையில் இயங்க இது நல்ல தொடக்கமாக அமைகிறது என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகிறார்.

பிரேக்ஃபாஸ்ட் முடிந்ததும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழை வரவழைத்து படிப்பாராம். அதுவும் டிஜிட்டல் காப்பியாக ஆன்லைனில் படிக்காமல், நாளிதழை ஹார்ட் காப்பியாக வாங்கித்தான் படிப்பாராம். தனது ஞாபக சக்திக்கு இப்படிச் செய்வது உதவு புரிவதாக, அவர் கூறுகிறார். கூகுளை இயக்குபவரே ஆன்லைனை நம்பாமல் உள்ளது வியப்பளிக்கிறது.