திடீரென மாயமான ராகுல் காந்தி! அதிர்ச்சிகள் காங்., நிர்வாகிகள்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென மாயமாகி இருப்பது அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியை அடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க அக் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் மறுத்துவிட்டது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் பலரும் சந்தித்து ராஜினாமா முடிவை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கேசி வேணுகோபால் மற்றும் அகமது பட்டியலை அழைத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கேரளாவில் தான் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிகள் மூன்று நாட்கள் முகாமிட்ட ராகுல் காந்தி அங்கு தனக்கு வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு ராகுல் காந்தி திடீர் என மாயமானார்.

வழக்கமாக ராகுல் காந்தி திடீரென மாயமாகும் போது அவர் எங்கு செல்வார் என்கிற தகவலை காங்கிரஸ் தெரிவிப்பது இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி இதேபோல் மாயமான போது அவர் வெளிநாட்டில் ஓய்வெடுக்க சென்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் விளக்கம் காங்கிரஸ் தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை.

தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற முதல் முறையாக கூடிய நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வராதது அக்கட்சியின் எம்பிக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. மேலும் ராகுல்காந்தி எங்கே சென்றார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாகவே கேள்வி கேட்ட படி கலைந்து சென்றனர்.