அவனுக்கு இன்னைக்கு பரிட்சைங்க! கதறிய தாய்! மின்வாரிய அலட்சியத்தால் மரணித்த சிறுவன்!

மின்சாரம் தாக்கியதால், மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குன்னூர் அருகே உள்ள ஒதனட்டி கிராமத்தில், சசிகுமார்- வைதேகி என்ற கணவன், மனைவி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பிரவீண் (14), நவீன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில், பிரவீண் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவருக்கு, பரீட்சை காரணமாக, ஸ்டடி லீவ் விடப்பட்டிருந்தது.

இதன்பேரில், வீட்டின் மொட்டை மாடியில் அவர் இன்று (10 ஏப்ரல்) விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென மாடியில் தொங்கிய மின்சார கம்பியில் அவரது கை பட்டுள்ளது. இதில், அவர் மீது அதிக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மின்சார கம்பியை பிடித்தபடி, 1 மணிநேரத்திற்கும் மேலாக அவரது உடல் அப்படியே இருந்துள்ளது.

ஆனால், மின்சார வாரிய அதிகாரிகள்  சிறுவனின் சடலத்தை மீட்பதில் பெரும் அலட்சியம் காட்டியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் சரியாக, மின்சார கம்பிகளை பராமரிப்பதில்லை என்றும், தாழ்வான உயரத்தில் மின்சார கம்பிகள் செல்வதால், இத்தகைய மின்விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது என்றும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அலட்சியம் காரணமாக பரிட்சைக்கு செல்ல வேண்டிய மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.