மாணவர்கள் படிச்சு வந்துக்கிட்டே இருக்காங்க! ஆனால் வேலை வாய்ப்பு?

பத்தாம் வகுப்பு, +2 முடித்து மாணவர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இளங்கலைக் கல்வி கிட்டதட்ட எல்லோருக்குமே கிடைத்துவிடுகிறது. ஆக, ஏராளமானவர்கள் படித்துமுடிக்கும் வகையில் கல்லூரிகள் நிறையவே இருக்கிறது. ஆனால், வேலை வாய்ப்பு..?


இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கே..

கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது அரசுக்கு அப்படியொரு நிர்பந்தம் இருக்கிறது. இந்த ஆண்டு 91 %. உழைக்கும் வர்க்கத்தினர் கல்லூரிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்திருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் அதன் பொற்காலத்தில் இருக்கின்றன. வசூலில்தான்.

அரசு கல்லூரிகளில் 500 ரூபாய் கட்டணம் என்றால் தனியார் கல்லூரிகளில் 2500, 3000, 4000, 10000 என தங்கள் விருப்பம் போல் வசூலிக்கத் தொடங்கிவிட்டன. அது பெரிய விசயமல்ல. இன்று வகுப்பறைகளில் 90 % மாணவர்கள் முதல் தலைமுறை படிப்பாளிகள். வகுப்பறைகளில் 60 முதல் 80 மாணவர்கள். அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்க அறிமுகப்படுத்தப்பட்ஷிப்ட்  கல்லூரி கலாச்சாரத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது. வகுப்பறையில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வளாகத்தில் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல் வெறும் பட்டத்தோடு லட்சக்கணக்கில் முதல்தலைமுறை அப்பாவிகள் வெளியேறியவண்ணமிருக்கின்றனர்.

அரசுக்கு மாதிரியே கல்லூரிகளுக்கும் தேர்ச்சி சதவீதத்தைக் அதிகரித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடுத்தரவர்க்க மாணவர்கள், குடும்பத்தினரின் கவனிப்பு ஆலோசனைகளில் அவர்களுக்கான வழிகளைக் கண்டடைந்து விடுகிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் அடித்தட்டு மாணவர்கள். கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, கட்டணம், அவர்களுக்கான வசதிகள், போதிக்கப்படும் கல்வி, அவர்கள் பெற்ற திறன்கள் பற்றி கேள்வி கேட்க (தரவரிசைப் பட்டியல் மட்டும் வெளிவரும்) முறைப்படுத்த எந்த வழி முறைகளும் இல்லை. மிகவும் அபாயகரமான நிலையில் இந்திய உயர்கல்வி இருப்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் இல்லை. இன்னும் 10ஆண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் அதிதீவிரப் பிரச்சனை படித்தவர்களின் வேலையின்மை. 70களின் நிலையைவிட பன்மடங்கு கூடுதலாக இருக்கப்போகிறது. பெருமளவிலான சீர்திருத்தம் தேவைப்படுகிறது

இதுவரை வேலைவாய்ப்பு பெருக்கும் எந்தத் திட்டமும அரசு வசம் இல்லை என்பதுதான் வேதனை. சுய தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற துறைகளை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை என்றால், இன்னும் 20 ஆண்டுகளில் மிகப்பெரும் துயரத்தை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும் என்கிறார்.

உண்மைதான்.